முன்பதிவு அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும்

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்து தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கும் படம் சர்கார். இப்படத்தின் முன்பதிவு இன்று முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்றே முன்பதிவு இணையதளங்களில் படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகியது. இதுவரை முன்பதிவு தொடங்கப்பட்ட தியேட்டர்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முதல் நாளன்று முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.

முன்பதிவு ஆரம்பமான அடுத்த சில நிமிடங்களில் அவை முடிந்தது. பல தியேட்டர்களில் காலை 8 மணிக்குதான் தீபாவளி தின முதல் நாள் காட்சிகள் ஆரம்பமாகின்றன. அதிகாலை காட்சிகளுக்கு எந்த தியேட்டரிலும் முன்பதிவு செய்யப்படவில்லை. சமீப காலங்களில் அதிகாலை 4 மணிக்கே சில தியேட்டர்களில் முன்பதிவு இருந்தது.

சர்கார் படத்திற்கும் அப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறப்புக் காட்சிகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு தரப்பிலும் கடுமையான கெடுபிடி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக பல தியேட்டர்களில் அதிகாலைக் காட்சிகளை ரத்து செய்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதே சமயம் பல முக்கியமான தியேட்டர்களில் முன்பதிவு இன்னும் ஆரம்பமாகவில்லை. பொதுவாக முன்பதி அறிவிக்கப்பட்ட தேதியில் காலை முதலே முன்பதிவு ஆரம்பமாவது வழக்கம். ஆனால், மதியத்தைக் கடந்த பின்னும் இன்னும் பல தியேட்டர்களில் முன்பதிவு ஆரம்பமாகவில்லை.

சென்னையின் பிரபலமான சத்யம் குழும தியேட்டர்களில் மதியம் 2 மணிக்குதான் முன்பதிவு ஆரம்பமானது. அடுத்த சில நிமிடங்களிலேயே தீபாவளி தினத்தன்று அந்த குழுமத்தின் அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.

அதிகாலை காட்சிகள் இல்லாத சூழ்நிலையில் எப்படியாவது படத்தை முதல் நாள் பார்த்துவிட வேண்டும் எனத் துடிக்கும் விஜய் ரசிகர்கள் முன்பதிவில் ஏற்படும் தாமதத்தால் கோபமடைந்துள்ளார்கள்.

Sharing is caring!