யாரிடமும் கோபப்படக்கூடாது… கட்சி நிர்வாகிகளுக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்

சென்னை:
தேர்தல் பணியில் ஈடுபடும் கட்சி நிர்வாகிகள், எந்த நேரத்திலும், யாரிடமும், கூட்டணி கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் கோபப்படக் கூடாது என்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் அட்வைஸ் செய்துள்ளார்.

தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. கன்னியாகுமரி, துாத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவையில் வேட்பாளர்களை நிறுத்துகிறது.இதில், கன்னியாகுமரி தவிர, மற்ற நான்கு தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், மண்டல தலைவர்கள், அணி நிர்வாகிகள் கூட்டத்தை, மதுரையில், சமீபத்தில், பா.ஜ., மாநில தலைமை கூட்டியிருந்தது. இதில், வேட்பாளர்களாக கருதப்படும் தலைவர்களும் பங்கேற்றனர்.

மாநில தலைவர் தமிழிசை தலைமையில், மத்திய அமைச்சரும், மேலிட பொறுப்பாளருமான பியுஷ் கோயல் பங்கேற்றார். ஒவ்வொரு தொகுதி வாரியாக, நிர்வாகிகளை அழைத்து கலந்துரையாடியவர், எத்தனை ஓட்டுச்சாவடிகள் உள்ளன, பூத் கமிட்டிகள் எத்தனை அமைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு கமிட்டியிலும் எத்தனை பேர் இடம் பெற்றுள்ளனர், எத்தனை பேர் இடம் பெற வேண்டும் என கேட்டறிந்து, சில ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், ஐந்தாண்டு கால ஆட்சியில், பிரதமர் மோடி கொண்டு வந்த, மேக் இன் இந்தியா, கிளீன் இந்தியா, பிரதமர் வீடு திட்டம், எய்ம்ஸ் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ரயில்வே திட்டங்கள் குறித்து விளக்கியவர், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அறிவுறுத்தினார்.

அவர் மேலும் பேசியதாவது:

தேர்தல் பணியில் ஈடுபடும் கட்சி நிர்வாகிகள், எந்த நேரத்திலும், யாரிடமும், கூட்டணி கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் கோபப்படக் கூடாது. கூட்டணி கட்சியினரை அரவணைத்து, தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும். ஐந்தாண்டு காலத்தில், பிரதமர் மோடி, எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

உலக அரங்கில், இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். உலக தலைவர்கள் விரும்பும் பிரதமராக, மோடி திகழ்கிறார்.இப்படி, பா.ஜ., அரசு செய்த சாதனைகளை, மக்களிடம் கொண்டு சென்றாலே போதும். செய்யாத திட்டங்களை கூறுவதால், அர்த்தம் இல்லை. தேர்தலுக்கு பிறகும், மோடி தலைமையில், பா.ஜ., அரசு அமையும். அப்போது, விடுபட்டு போன திட்டங்களையும் நிறைவேற்றுவோம் என, மக்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆலோசனை நள்ளிரவு வரை நீடித்தாலும், எல்லா நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய பின்னரே, டில்லிக்கு புறப்பட்டு சென்றார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!