“வர்மா” படம் கைவிடப்பட்டது. இயக்கம் பாலா…நடிப்பு துருவ் விக்ரம்

தெலுங்கில் வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் இயக்குனர் பாலா ரீமேக் செய்துள்ள படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக வேறு ஒரு இயக்குனருடன் மற்றும் சில நடிகர், நடிகைகளை மாற்றி இப்படம் மீண்டும் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படம் மூலமாக விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழிலிலும் ரசிகர்கள் அதிகமானார்கள்.

இதனால் இப்படத்தை ரீமேக் செய்வது என தயாரிப்பு நிறுவனமான E4 Entertainment நிறுவனம் முடிவு செய்து இயக்குனர் பாலாவிடம் ஒப்படைத்தது. விக்ரமின் மகன் துருவை கதாநாயகனாக வைத்து பாலாவும் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். கடந்த 4 வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் மாதம் வெளியாகும் என்று ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில், திரைப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், வேறு இயக்குநர் மற்றும் வேறு நடிகர்களுடன் படப்பிடிப்பை மீண்டும் புதிதாக நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே துருவை கதாநாயகனாக வைத்து படப்பிடிப்பு மீண்டும் நடைபெறும். இயக்குநர் உள்பட நடிகர், நடிகைகள் மாற்றப்படுவர். தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு சிறிதும் குறையாமல் ‘வர்மா’ வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே படப்பிடிப்பு மீண்டும் நடைபெற்று ‘வர்மா’ வருகிற ஜூன் மாதம் ரிலீசாகும். படத்திற்கான புதிய இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகள் மாற்றம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!