வாடகை பாக்கி தராமல் யாரும் ஓட்டலை விட்டுச் செல்லமுடியாது

வளர்ந்து வரும் மலையாள நடிகை மஞ்சு சாவர்கர். தற்போது அவர் நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதியில் நடந்து வருகிறது. இதனால் படப்பிடிப்பு குழுவினருடன் அவர் நாகர்கோவில் அருகே உள்ள செட்டிகுளித்தில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மஞ்சு படப்பிடிப்பை முடித்து விட்டு முன்னதாகவே ஓட்டலுக்கு திரும்பி விட்டார்.

ஓட்டலில் அவர் தங்கியிருந்த அறை சுத்தம் செய்யப்படாமலும், படுக்கை விரிப்புகள் மாற்றப்படாமலும் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு ஓட்டல் ஊழியர்களிடம் கடிந்து கொண்டார். ஓட்டல் ஊழியர் மானேஜரிடம் புகார் கூறியதைத் தொடர்ந்து மானேஜர் மஞ்சுவை சந்தித்து “உங்கள் தயாரிப்பாளர் ஓட்டல் வாடகை பாக்கி 60 ஆயிரம் தர வேண்டியுள்ளது. அதை தந்தால்தான் மற்ற பணிகள் நடக்கும்” என்று கூறியுள்ளார்.

இதனால் மஞ்சு நான் ஓட்டலை காலி செய்துவிட்டு வேறொரு ஓட்டலில் தங்கிக் கொள்கிறேன். என்று கிளம்பத் தயாரானார். அப்போது மானேஜரும் மற்ற ஊழியர்களும் வாடகை பாக்கி தராமல் யாரும் ஓட்டலை விட்டுச் செல்லமுடியாது என்று மஞ்சுவை தடுத்து ஓட்டலிலேயே அமர வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அழுதபடியே செல்போனில் தன் உறவினர்களுக்கும், படப்பிடிப்பு குழுவினருக்கும் தகவல் சொன்னார்.

இந்த தகவல் கிடைத்ததும் போலீசாரும் அங்கு வந்து மஞ்சுவை சமாதானப்படுத்தினர். சில மணி நேரத்திற்கு பிறகு வந்த படப்பிடிப்பு நிர்வாகி வாடகை பாக்கியை தருவதாக ஒப்புக் கொண்ட பிறகு மஞ்சு விடுவிக்கப்பட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை.

Sharing is caring!