விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கைது

விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்கள் சிலர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று (19) பூட்டு போட்ட நிலையில், அதனை உடைத்த விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்கத் தொடங்கினர். பொதுக்குழுவை கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பட வெளியீட்டில் பாரபட்சம், இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு சங்க பொதுக்குழு கூட்டாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டது உட்பட பல பிரச்சினைகளை முன்வைத்து நேற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று போராட்டம் நடத்தினார்கள்.

சுமார் 50 பேர் திரண்டு சங்க அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டனர்.

மூத்த இயக்குனர் பாரதிராஜா தலைமையில் முதல் அமைச்சரை சந்தித்து விஷால் மீதான குற்றச்சாட்டுகளைக் கூற நேற்று முயற்சி செய்தனர். அவர்களுக்கு இன்று காலை அனுமதி கிடைத்துள்ளது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாரதிராஜா தலைமையிலான தயாரிப்பாளர்கள் முதல்வரிடம் சினிமா சங்கங்களில் நிலவும் பிரச்சினைகளை சமாளிக்க ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்க கோரிக்கை விடுக்கப்போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஷால் மற்றும் அவருக்கு ஆதரவான தயாரிப்பாளர்கள் இன்று தி.நகர் காவல் நிலையம் அருகே திரண்டார்கள்.

இதன்போது, விஷால் மற்றும் அவரது ஆதரவு தயாரிப்பாளர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை பொலிசார் கைது செய்தனர்.

Sharing is caring!