வீரமாதேவியாக சன்னி லியோன் நடிக்க தடைமனு தள்ளுபடி

சாமிடா, தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்கும் புதிய படம் வீரமாதேவி. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தில் வீரமாதேவியாக பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் நடித்து வருகிறார். இதற்கு பல கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் வீரமாதேவி கேரக்டரில் சன்னி லியோன் நடிக்க கூடாது என்று மதுரை செல்லூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “வீரமாதேவி சோழ மன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவி, சிறந்த வீராங்கனை, பல கோவில்களை கட்டியவர். அவரை சோழ மண்டலத்து மக்கள் தெய்வமாக வணங்கி வருகிறார்கள். அப்படிப்பட்டவர் கேரக்டரில் ஆபாச நடிகை சன்னி லியோன் நடிப்பது வீரமாதேவியை அவமானப்படுத்துவதாகும். எனவே அவர் நடிக்க தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், “நடிகர், நடிகைகளில் யார் வேண்டுமானாலும், எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். அவர்கள் நடிக்கும் கேரக்டருடன் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை ஒப்பிடக்கூடாது” என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Sharing is caring!