“வெண்பா” குறும்படம் வெளியீடு

போஸ்டரை பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் வெளியிட்டார்.

ஒன் ஹெவன் டியூன்ஸ் என்ற தனியார் அமைப்பு சார்பில் தோல் விழிப்புணர்வு தொடர்பான ”வெண்பா” விழிப்புணர்வு திரைப்பட போஸ்டர் நேற்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது. ”வெண்பா” விழிப்புணர்வு திரைப்பட போஸ்டரை பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் வெளியிட திரைப்பட நடிகரும், பன்முக கலைஞருமான மோகன் வைத்தியா பெற்றுக் கொண்டார்.

இந்த குறும்படம் குறித்து அவ்வமைப்பினர் கூறியதாவது:- இந்த குறும்படம் மருத்துவ குறிப்பினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தற்போது, பெரும்பாலான மக்களிடையே உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளோம். ஆனால், தோல் தேவை குறித்து அறியப்படாமல் உள்ளது. உடல் உறுப்பு தானம் வழங்குபவர்களில் பலர், தோல் தானத்தை மருத்துவ படிவங்களில் குறிப்பிடாமல் விட்டு விடுவதால் அது தேவையற்று போய்விடுகிறது.

இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தில் திரைப்பட நடிகரும், பண்முக கலைஞரான மோகன் வைத்தியா, நடிகை வெண்ணிராடை நிர்மலா ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரமாக அபிநயா பரமேஷ்வரன், சந்தானம், யோகேஸ் ஆகியோர் நடிக்கின்றனர். சுப்ரமணியம், லக்ஷ்மி செல்வி, மருத்துவர் சௌமியா வருண் ஆகியோர் நடித்துள்ளனர், எனக் கூறினர்.

இது குறித்து பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறுகையில், “இந்த திரைப்படத்தில் நடிக்கும் அபிநயா மற்றும் அவரது தந்தை பல்வேறு சமூக அக்கறை உள்ள குறும்படங்களை இயக்கி உள்ளனர். மருத்துவ ரீதியான தேவையை ஒரு சமூக அக்கறையுடன் குறும்படமாக இயக்கி உள்ளனர். சமூக வலைதளங்களில் குறும்படங்கள் கொண்டு செல்வதன் மூலம் விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது,” எனத் தெரிவித்தார்.

திரைப்பட நடிகர் மோகன் வைத்தியா கூறுகையில், “இந்த குறும்படம் சிறப்பாக வந்துள்ளது. இளம் தலைமுறையினர் இதனை மூன்று நாட்களில் படமாக்கி உள்ளனர். 20 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு பாடலும் இடம்பெற்று உள்ளது,” எனக் கூறினார்.

Sharing is caring!