ஶ்ரீதேவியின் அற்புதமான 20 படங்கள் இவைதான்

குழந்தை நட்சத்திரமாக, குறும்பான குமரி பெண்ணாக, பாடகியாக, ஆபத்தை அறியாத துணிக்கடை விற்பனை பெண்ணாக, ஆங்கிலம் தெரியவில்லை என பிள்ளைகளும், கணவரும் பரிகாசம் செய்யப்படும்போது சவாலாக எடுத்துக் கொண்டு ஆங்கிலம் கற்கும் நடுத்தர வயது பெண்ணாக என ஸ்ரீதேவி ஏற்று நடித்திராத கதாப்பாத்திரமே இல்லை எனலாம்.

300 படங்களைக் கடந்த ஸ்ரீதேவியின் சிறந்த படங்களை வரிசைப்படுத்துவது இயலாததே என்றாலும் அவருடைய வாழ்வில் திருப்பத்தைக் கொடுத்த படங்களைச் சொல்லலாம்.

‘துணைவன்’ திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி, எண்ணற்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஸ்ரீதேவியின் முக்கிய திரைப்படங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

துணைவன்


ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம். கறுப்பு-வெள்ளையிலும், ஈஸ்ட்மேன் கலரிலும் வெளிவந்தது. முருகன் வேடத்தில் நடித்திருந்த ஸ்ரீதேவி, தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைக் கொள்ளைக்கொண்டார்.

மூன்று முடிச்சு

ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கி, ஸ்ரீதேவி நடித்த படம். இயக்குநர் பாலச்சந்தரின் வசனங்களைப் புரிந்துக் கொண்டு, ஒவ்வொரு உச்சரிப்பிற்கும் ஒருவித முகபாவணையைக் கொண்டு வந்திருப்பார் ஸ்ரீதேவி.

16 வயதினிலே

ஆரம்பத்தில் ஒரு கிராமத்து வெகுளிப் பெண்ணாக தோன்றும் ஸ்ரீதேவி, தான் ஏமாற்றப்பட்ட பின்னர் மிகவும் முதிர்ச்சியான மனோபாவத்தையும், நடிப்பையும் வெளிப்படுத்தி இருப்பார்.

தான் முன்பு ஏளனம் செய்த கமல்ஹாசனை ஏற்றுக்கொள்வதும், வில்லன் ரஜினியை புறந்தள்ளும் கண்டிப்பும் அந்த சிறு வயதிலேயே ஸ்ரீதேவிக்குள் இருந்த நடிப்பாற்றல் ஒரு சிறந்த நடிகை உருவாகிவருகிறார் என்று ரசிகர்களுக்குப் புரியவைத்தது.

மூன்றாம் பிறை

தனது கடந்தகால நினைவுகளை தொலைத்த ஒரு இளம் பெண்ணாக மூன்றாம்பிறை படத்தில் ஸ்ரீதேவி மிக சிறப்பாக நடித்திருப்பார்.

மனநிலை பாதித்த பெண்ணாக ஸ்ரீதேவி நடித்த அந்த வேடமும், சுப்பிரமணி என்ற நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளும் பிஞ்சு மொழியைத் திரையில் பிரதிபலித்தன. இந்தத் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, அடுத்த தலைமுறை ரசிகர்களையும் அழ வைக்கும்.

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983-ஆம் ஆண்டு வெளியான ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் நடிப்பாற்றலில் ஸ்ரீதேவியின் மற்றொரு பரிமாணத்தையும் வெளிப்படச் செய்தது.

கமல்ஹாசனோடு ரயில் தண்டவாளத்தில் காது வைத்து ரயில் வரும் சத்தத்தைக் கேட்கும் காட்சியும், நாய்குட்டியை ‘சுப்பிரமணி’ என வாஞ்சையோடு அழைக்கும் பாங்கும், ‘கண்ணே கலைமானே’ பாடலில் அவர் காட்டும் ஆயிரமாயிரம் முகபாவங்களும் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருதையும், ஏராளமான பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது.

ஜானி


அர்ச்சனா என்ற பாடகி கதாப்பாத்திரத்தில் தோன்றிய ஸ்ரீதேவி, படம் முழுவதும் அர்ச்சனாகவே வாழ்ந்து காட்டியிருப்பார்.

தனது காதலன் சரியான பாதையில் செல்லவில்லையோ என்ற பரிதவிப்பும், சந்தேகமும் இருந்தாலும் கொட்டும் மழையில் ரஜினிகாந்தை எதிர்பார்த்து அவர் பாடும் பாடலில் நவரசத்தையும் வெளிபடுத்தியிருப்பார்.

இந்த படத்தில் இடம்பெறும் இனிமை மிகுந்த பாடல்களை பாடியிருப்பது பாடகி ஜென்சியா அல்லது ஸ்ரீதேவியா என்று தோன்றும் அளவுக்கு ஸ்ரீதேவியின் பங்களிப்பு இருக்கும்.

வறுமையின் நிறம் சிவப்பு

பொறுப்பில்லாத தந்தை, நடுத்தர குடும்பம் என பல குடும்ப சுமைகளை தாங்கும் ஸ்ரீதேவி கமலோடு ஆரம்பத்தில் நட்போடும், பின்னர் காதலோடும் அருமையாக நடித்திருப்பார். கமல்ஹாசனுக்கு இணையாக ஸ்ரீதேவி பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் பல அம்சங்களில் தனித்துவத்தோடு திகழ்கிறது.

‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…’ பாடலில் என்னென்ன முகபாவங்கள்! சட்சட்டென மாறும் அந்த வேகம், ஒரு சின்னக் காட்சிக்குள் நூறு சிறு நுணுக்கங்களை காட்டும் லாகவம், சற்றும் தயங்காத நடிப்பின் சரளத்தன்மை, எந்தவித உணர்ச்சிக்கும் தன்னுடலை ஒப்புக்கொடுக்கும் அர்ப்பணிப்பு… இவையெல்லாம் ஸ்ரீதேவியை வேறு உயரத்திற்கு அழைத்துச் சென்றிருக்கும்.

மீண்டும் கோகிலா


மடிசார் அணிந்து ஒரு குடும்பப் பெண்ணாக ‘மீண்டும் கோகிலா’ திரைப்படத்தில் வலம்வந்த ஸ்ரீதேவி, பெண் பார்க்க வந்த கமலை பார்க்க தயங்குவதும், திருமணமான பின்னர் கமலை ஆதிக்கம் செய்ய முயல்வதும் என நடிப்பில் பல மைல்களை கடந்திருப்பார்.

தனது குழந்தையிடம் மொட்டை மாடியில் ‘இதுதான் அப்பா போற ஃபிளைட்’ என்று வானத்தில் சிறுபுள்ளியாக தெரியும் விமானத்தை சுட்டிக்காட்டுவது கொள்ளை அழகு.

ஹிம்மத்வாலா


இந்தி ரசிகர்களிடைய ஸ்ரீதேவியை அடையாளப்படுத்திய படம். முதல் அறிமுகத்திலேயே இந்தி ரசிகர்கள் ஸ்ரீதேவியை தங்களது கனவுக் கன்னியாகப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

நாகினா

ஸ்ரீதேவி  ‘இச்சாதாரி பாம்பு’ வேடத்தில் நடித்து வெளியாகிய ‘நாகினா’ பிளாக் பஸ்டர் படம். க்ளைமாக்ஸில் ‘மெயின் தேரி துஷ்மான்’  பாடலுக்கு இவர் ஆடும் நடனம் இந்தி சினிமாவின் மிகச்சிறந்த நடனங்களுள் ஒன்றாகும்.

‘நடன தேவதை’ என இந்தி ரசிகர்கள் கொண்டாடியதற்கேற்ப படத்தில் நடனத்தில் அசத்தியிருப்பார் ஸ்ரீதேவி. ‘படத்தில் என்னுடைய நடனம் நன்றாகயிருக்கிறது என சொல்கிறார்கள். ஆனால், நான் டான்ஸ் க்ளாஸ் எல்லாம் போனதே கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்டில் சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஆடினேன்’ என ஸ்ரீதேவி சொன்னாலும், அவரை ஒரு தேர்ந்த டான்ஸராகவே இந்த படம் அடையாளப்படுத்தியது.

மிஸ்டர் இந்தியா


ஸ்ரீதேவி பத்திரிக்கையாளராக நடித்து வெளியான ‘மிஸ்டர் இந்தியா’ திரைப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று. மேலும், இந்தி சினிமாவில் வெளியாகிய தேசப்பற்று திரைப்படங்களில் தவிர்க்கமுடியாத திரைப்படமாக இது விளங்கி வருகிறது.

படத்தில் பத்திரிக்கையாளராக வருகிற ஸ்ரீதேவி, தன் பங்கிற்கு படத்தை தனது மேனரிஸங்களால் இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றிருப்பார். ஸ்ரீதேவியின் வாழ்வில் மறக்க முடியாத படமாகவும் அமைந்துவிட்டது மிஸ்டர் இந்தியா. போனிகபூருடனான காதலுக்கு அஸ்திவரம் போட்ட படம் மிஸ்டர் இந்தியா.

சால்பாஷ்


ஸ்ரீதேவி இரட்டையர்கள் வேடம் போட்ட படம். உறவினர்களால் கொடுமைப்படுத்தப்படுகிற பெண்ணாகவும், கழைக் கூத்தாடுகிற பெண்ணாகவும் தன் துருதுரு நடிப்பால் அசத்தியிருப்பார். டைமிங் காமெடியில் இன்று வரையில் ரசிகர்கள் கொண்டாடுகிற படமாகவும் இருக்கிறது.

சாந்தினி

80களின் இறுதியில் ரிலீஸான படம். அந்த வருடத்தைய ஹிட் பாக்ஸில் முதலிடத்தைப் பிடித்தது. யாஷ்சோப்ராவின் ரொமாண்டிக் வரிசையில் இந்தப் படத்திற்கு தனி இடம் உண்டு. பாடல், நடனம்,காதல் என ஸ்ரீதேவியை வேறு ஒரு உயரத்திற்கு அழைத்துச் சென்ற படம்.

ஷணாஷணணம்


இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தெலுங்கில் ஹிட்டடித்த படம். த்ரில்லராக உருவான இந்த படத்தில், தன் கதாபாத்திரத்தின் மூலம் இன்னும் மெருகேற்றிருப்பார் ஸ்ரீதேவி.

லாம்ஹி

இந்தி ரொமான்ஸ் படங்களில் லாம்ஹி’க்கு தனி இடம் உண்டு. சோகத்தில் முடிகிற இந்த காதல் படத்தைப் பார்த்த பின்னரும் அதன் நினைவலைகளில் இருந்து யாரும் மீளமுடியாது என்கிற அளவிற்கு நடித்திருப்பார் ஸ்ரீதேவி.

ஜூடாய்

மெலோடிராமா வரிசையில் ஹிட்டடித்த படம். இன்றும் பாலிவுட் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகிற அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற படம். இரண்டு பெண்கள் தங்களது காதல் கதையை பகிர்ந்துக் கொள்கிற பாத்திரத்தில், அப்பாவிப் பெண்ணாகவே வாழ்ந்திருப்பார் ஸ்ரீதேவி.

லாட்லா

கன்னடத்தில் வெளியான ‘அனுராக அரலிது’ படத்தின் ரீமேக் படம். கார்ப்பரேட் பெண்மணியாக, தன்னுடைய துணிச்சலான நடிப்பை வாரி வழங்கியிருப்பார் ஸ்ரீதேவி. அவருடைய துணிச்சலான, தனித்தன்மையான நடிப்பிற்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம்.

ரூப் கி ராணி ஷோரோன் கா ராஜா

இந்திய சினிமாவில் அதிக பொருட்செலவில் உருவான திரைப்படங்களில் ஒன்றான ‘ரூப் கி ராணி ஷோரோன் கா ராஜா’ திரைப்படம் வசூலில் தோல்வியைத் தழுவியது. ஆயினும்கூட ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரத்தை, ‘இதுவரை தென்னிந்திய நடிகைகள் நடித்த பாத்திரத்திலே சிறந்த பாத்திரம் இதுதான்’ எனப் புகழ்ந்து கூறின அன்றைய பத்திரிகைகள்.

தோஃபா

ஸ்ரீதேவி, ஜிதேந்திரா ஹிட் ஜோடியின் வெற்றியை மறுபடியும் நிருபித்த படம். ஸ்ரீதேவியை ‘பெண் சூப்பர் ஸ்டார்’ உயரத்திற்கு ரசிகர்களிடையே கொண்டு சேர்த்த படம் ‘தோஃபா’.

இங்கிலீஷ் விங்கிலீஷ்

நீண்ட நாட்களுக்குப் பிறகான ஸ்ரீதேவியின் ரீ-எண்ட்ரி. மீண்டும் கதாநாயகியாகவே வலம் வந்தார் ஸ்ரீதேவி. நடுத்தர வயது பெண்மணியாக, ஆங்கிலம் தெரியாத அப்பாவி அம்மாவாக, படம் முழுக்க பட இடங்களில் கண்களாலேயே ஸ்ரீதேவி நடித்த படம்.

மாம்

பள்ளி ஆசிரியை ஸ்ரீதேவி, கணவனுக்கு இரண்டாம் தாரம். முதல் தாரத்தின் மகள் சாஜல் அலி, இன்னமும் ஸ்ரீதேவியை நேசிக்காமல் தனது தாயின் நினைவிலேயே இருக்கிறார். 18 வயதாகும் அவர், வேலண்டைன் டே பார்ட்டிக்குச் செல்ல, அங்கே நிகழ்கிறது ஓர் அசம்பாவிதம். அதிலிருந்து தப்பி, உயிர் மட்டும் எஞ்சிய நிலையில் பித்துப் பிடித்து வாழும் மகளுக்காக, அவள் வாழ்வை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை ஸ்ரீதேவி திட்டமிட்டுப் பழிவாங்கும் கதைதான் ‘மாம்’.

நடிப்பில் ஸ்ரீதேவி அசத்துகிறார். படம் முழுக்க மகள் சாஜல் அலி, தன்னையும், தனது அன்பையும் நிராகரிக்கும்போதெல்லாம் உள்ளுக்குள் அத்தனை ஏமாற்றம் இருப்பதை உடல்மொழியில் காட்டிக்கொண்டு, முகத்தில் லேசான புன்னகையுடன் அதைக் கடந்து செல்வார். சிறுநீர் கழிக்க மகள் ‘BedPan’ வைக்கச் சொல்கிறாள். வைத்ததும், அருகிலேயே ஸ்ரீதேவி நின்றுகொண்டிருக்க, அந்த முடியாத நிலையிலும் ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்காத மகள், ப்ரைவசிக்காக ஒற்றைக்கையில் படுக்கை அருகே இருக்கும் ஸ்கிரீனை மூடுகிறார். ஒட்டுமொத்தமாக ஸ்ரீதேவி உடைந்து போகும் அந்தக் காட்சி, நடிப்புக்காக ஸ்ரீதேவிக்கு மீண்டும் தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த படம் மாம்.

Sharing is caring!