ஶ்ரீதேவி….காதல் முதல் கல்யாணம் வரை….

அரை நூற்றாண்டுகளாக இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் ‘காதல் இளவரசியாக’ வீற்றிருந்த ஸ்ரீதேவியின் நிஜவாழ்வின் காதலும் திருமணமும் எப்படியிருந்தது?

51 ஆண்டுகால திரை வாழ்வில் காதல் இளவரசியாக, சிறந்த நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவியின் திரைக்கு பின்னால் உள்ள நிஜ காதல் மற்றும் திருமணம் எப்படிப்பட்டது?

திரையுலகில் இன்னும் இன்னும் என எல்லா மொழிகளிலும் வெற்றியை அறுவடை செய்த காலத்திலும் ஸ்ரீதேவியின் தனிப்பட்ட வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவே இருந்தது. உச்ச நட்சத்திரமாக இரவு பகல் வித்தியாசம் தெரியாமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் ஸ்ரீதேவி, போனி கபூரைச் சந்தித்தார்.

தாய், தந்தையை இழந்து, உடன் பிறந்த தங்கையால் ஏமாற்றப்பட்டு, விரக்தியின் விளிம்பில் சம்பாதித்த சொத்துக்களையும் இழந்து இருந்த ஸ்ரீதேவிக்கு, மனைவியை இழந்த போனிகபூர் ஆறுதலளித்தார். தங்களது படங்களில் கனவுக்கன்னி ஸ்ரீதேவி நடிப்பதற்கான சவாலான வேடங்களை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் யோசித்துக் கொண்டிருக்கையில், திரைக்குப் பின்னால் உண்மையான காதலை அனுபவித்து அரங்கேற்றிக் கொண்டிருந்தார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவியின் கண்ணசைவுக்காக பெரிய பெரிய தொழிலதிபர்களும், இளைஞர்களும் காத்திருக்க, ஏற்கெனவே திருமணமான திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை தேர்வு செய்தார் ஸ்ரீதேவி. இந்த காதல் திருமணத்தில் கைகூடிய போது, ஸ்ரீதேவி, போனி கபூர் என இருவருமே தங்களது வாழ்வைப் பற்றி ஒரு தெளிவான மனநிலையில் இருந்தனர். இந்த காதல் தம்பதிகளின் காதல் விடலைப் பருவ காதல் அல்ல. இருவரும் உலகம் அறிந்தவர்கள், பொறுப்புணர்ந்தவர்கள். 80களில் இவர்களின் காதல் கதை தொடங்கியது.

‘மிஸ்டர் இண்டியா’ திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து, கதாசிரியர் ஜாவேத் அக்தர் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர், ஸ்ரீதேவியிடம் பேசுவதற்காக சென்னைக்கு வந்தனர். தொலைபேசியில் பேசிய ஸ்ரீதேவியின் தாயார், மகள் பல படங்களில் நடிப்பதால் சில நாட்கள் காத்திருக்கச் சொன்னார். அந்த நேரத்தில் மிகவும் பிஸியாக இருந்த ஸ்ரீதேவியிடம் இருந்து 3-4 நாட்களுக்கு போன் வரவில்லை. இருவருக்கும் கவலை ஏற்பட்டாலும், போனி கபூருக்கு ஆழ்ந்த கவலை ஏற்பட்டது. ஏனெனில் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டிருந்த அவர், கதாநாயகியாக நடிக்க ஸ்ரீதேவியே பொருத்தமானவர் என்று உறுதியாக நம்பினார்.

தினமும் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு நடையாய் நடந்த போனி கபூரால், பத்து நாட்களுக்கு பிறகே ஸ்ரீதேவியை சந்திக்க முடிந்தது. கதையை கேட்ட ஸ்ரீதேவி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இது தான் இருவருக்குமான முதல் அறிமுகம். ஒரு பொது நிகழ்ச்சியில், தனது காதல் கதையை, ‘ஸ்ரீதேவியை நான் முதன்முதலில் திரையில் பார்த்ததுமே அவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்பட்டது’ என்கிறார் போனி கபூர்.

‘70 களில் தமிழ் திரைப்படத்தில் அவரை முதன்முதலாக பார்த்தேன், படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக சென்னைக்கு சென்றேன். ஆனால், அப்போது அவர் சென்னையில் இல்லை. பின்னர் அவரை ‘சோல்வா சாவன்’யில் பார்த்தேன். அவரின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது, பிறகு அவரை ‘மிஸ்டர் இந்தியா’ திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்தேன். அப்போது ஸ்ரீதேவியின் தாயே அனைத்து முடிவுகளையும் எடுப்பார். ஸ்ரீதேவியின் சம்பளம் மிகவும் அதிகம்தான். திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடிக்க 10 லட்சம் ரூபாய் சம்பளம் என்று அவர் அம்மா சொன்னார். என் முடிவில் இருந்து பின்வாங்கச் செய்வதற்காக அவர் அப்படி சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் நான் 11 லட்சம் தருவதாக சொன்னேன்.”

ஸ்ரீதேவியின் தாய் என்னுடன் நட்பாக பழகினார். அருமையான அலங்கார அறை, சிறந்த ஆடைகள் என ஸ்ரீதேவிக்கு தேவையான அனைத்தையும் படப்பிடிப்பு தளத்தில் தயாராக வைத்திருப்பேன். உண்மையில் நான் அவரை காதலித்தேன். அந்த சமயத்தில் ‘சாந்தினி’ திரைப்படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். ஏதாவது காரணத்திற்காக படபிடிப்பு நடந்து கொண்டிருந்த சுவிட்சர்லாந்துக்கு ஸ்ரீதேவியை சந்திக்க சென்றுவிடுவேன். இப்படித்தான் என் காதல் கதை தொடங்கியது’ என்று விவரிக்கிறார் போனிகபூர்.

ஸ்ரீதேவியின் தாயாருக்கு நோய் ஏற்பட்டது முதல் அவர் இறக்கும் காலகட்டமே போனி கபூருடன் ஸ்ரீதேவிக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இந்த சமயத்தில் ஸ்ரீதேவிக்கு உறுதுணையாக இருந்தது போனி கபூர்தான். ஸ்ரீதேவியின் தாய்க்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்ரீதேவி வழக்கு தொடுத்தபோது 16 கோடி ரூபாய் இழப்பீடு கிடைத்தது. அந்த சிக்கலான நடைமுறைகள் முழுவதிலும் போனி கபூர்தான் ஸ்ரீதேவிக்கு உதவி செய்தார். தனது தாய்க்கு போனி கபூர் செய்த பணிவிடைகளை பார்த்து ஸ்ரீதேவியின் மனம் காதலில் விழுந்தது.

ஸ்ரீதேவியின் தாய்க்கு முன்னரே தந்தை இறந்து விட்ட நிலையில், தாய்க்கு பிறகு தனி மரமாக நின்றார். அப்போது மன உளைச்சலில் இருந்த ஸ்ரீதேவிக்கு ஆறுதல் சொல்லி, அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது போனி கபூர் தான். இப்படித்தான் இருவரும் காதலில் இணைந்தனர்.

மிஸ்டர் இண்டியா, ரூப் கி ராணி-சோரோ கா ராஜா, மாம் போன்ற போனி கபூரின் திரைப்படங்களில் ஸ்ரீதேவி நடித்தார். இருவரிடையே காதல் ஆழமாக இருந்தாலும், அவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணைவது அவ்வளவு எளிதானதாக இல்லை. போனி கபூர் ஏற்கனவே திருமணமானவர், இரண்டு குழந்தைகளின் தந்தை. எனவே இருவருக்கும் இடையே திருமணம் நடைபெறாது என்றே அனைவரும் கருதினார்கள். ஆனால் இருவரும் 90களில் திருமணம் செய்து கொண்டனர். இருவரின் குடும்ப பின்னணியும் மாறுபட்டவையே. ஸ்ரீதேவி தமிழ்நாட்டை சேர்ந்தவர். போனி கபூரோ பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இருவரின் கலாசாரம், பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டவை.

தன் காதலின் மேல் இருந்து உறுதியால், திருமணத்திற்கு பிறகு ஸ்ரீதேவி, பஞ்சாபிகளின் நடைமுறைகளை கற்றுத் தேர்ந்தார், அவர்களின் பழக்க வழக்கங்களையே கடைபிடித்தார். கணவன் வீட்டாருக்கு ஏற்றாற் போல தன்னை மாற்றியமைத்துக் கொண்டார். தனது குடும்ப பழக்க வழக்கத்தையோ, கலாசாரத்தையோ கடைபிடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி ஒருபோதும் கணவரிடம் வற்புறுத்தியதில்லை.

‘தன்னைப் போல், உடல் நலத்தை அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாததால் மட்டுமே சில சமயம் போனி கபூர் மீது கோபம் வரும். வேறு எதற்காகவும் இதுவரையில் கோபப்பட்டதில்லை’ என்று தங்களது காதல் வாழ்க்கைப் பற்றி மனம் திறந்திருக்கிறார் ஸ்ரீதேவி.

Sharing is caring!