‘ஸ்ரீதேவி’ இடத்தை ‘ஜான்வி’ நிரப்புவாரா?

‘16 வயதினிலே’ படத்தில்  பாவடை தாவனியில் தோன்றிய அழகு மயிலை அவ்வளவு எளிதாக  ரசிகர்கள் மறந்து விட மாட்டார்கள்.  தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் என  அனைத்து மொழிகளிலும் ஸ்ரீதேவியின் நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். அவரின் இறப்புக்கு பிறகு அதிகம் பேசப்படுபவர் அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர்.

ஸ்ரீதேவி உயிருடன்  இருக்கும்போதே அவரின் மகளை  சினிமாவில் அறிமுகப்படுத்த  பல திட்டங்களை வகுத்து இருந்தார். அவரின் அறிமுக படம் கூட  எப்படி அமைய வேண்டும் என்று ஸ்ரீதேவி தான் முடிவு செய்திருந்தார். இந்நிலையில்  ‘தடாக்’ இந்தி படத்தில்  ஜான்வி கபூர் அறிமுகமானார்.

‘தடாக்’ திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், விமர்சனம் ரீதியாக பெரும்  பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக  படத்தில் ஜான்வியின் நடிப்பு  ஸ்ரீதேவியின் நடிப்புடன் ஒப்பிட்டு பேசப்படுகிறது. அதோடு ஜான்வி ஸ்ரீதேவி போல் திரையில் நடிக்கவில்லை  என்றும் விமர்சனமும் எழுந்துள்ளது.

‘தன்னை தன் தாயுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்’ என்று ஜான்வி கபூர் ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிற அளவிற்கு அவரது நடிப்பு விமர்சிக்கப்பட்டது.

‘இது நடக்கும் என்று எங்களுக்கும் தெரியும். ஸ்ரீதேவிக்கும் தெரியும், அதனால் தான் அவர் மிகவும் கவலைப்பட்டார். இது போன்று நடக்கும் என்று எதிர்பார்த்து அதை எதிர்கொள்ள ஜான்வியை தயார் செய்தார்’ என்கிறார் போனிகபூர்.

ஆனால், ‘தடாக்’ படம் விமர்சனங்களை கடந்து 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

ஆணவக் கொலையை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த இந்த படம், ஜான்விக்கு முதல் படம் என்றாலும், அவரை அறிமுக ஹீரோயினாக பாலிவுட் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தங்கள் அபிமான நாயகியின் மகளாகவே ஜான்விகபூரைப் பார்க்கிறார்கள். இந்த அழுத்தம் ஜான்வி முதல் படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும், ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள இயலாதவராகவே இருக்கிறார். சில காட்சிகளில், தான் ‘ஸ்ரீதேவியின் மகள்’ என்று நிரூபிப்பதற்கு அழுத்தமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருந்தாலும், ஒட்டுமொத்தமாக  ஜான்வியால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘தடாக்’கில் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றே சொல்லலாம். ரொமான்ஸ் காட்சிகளில் ஸ்ரீதேவியின் நடிப்புத்திறன் வேறு எந்தவொரு நடிகைக்கும் அவ்வளவு எளிதில் கைவருமா என்பது சந்தேகம் தான். அம்மாவின் உயரத்தை ஜான்வி எதிர்காலத்தில் பிடிக்க வாய்ப்பிருப்பதாகவே அவரது ரசிகர்கள் கணிக்கிறார்கள்.

Sharing is caring!