3 நாளில் 100 கோடி

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த படம் ‘டெம்பர்’. லஞ்ச, லாவண்யத்தில் திளைத்த போலீஸ் அதிகாரி, கடத்தல்காரர் ஒருவருடன் நெருக்கமாக உள்ளார். தனது சகோதரர்கள் செய்த கொலை ஒன்றின் ஆதாரத்தை வைத்திருக்கும் பெண் ஒருவரைக் கொல்ல நினைக்கிறார். அப்படிப்பட்ட கடத்தல்காரருடன் பழக்கம் வைத்திருக்கும் போலீஸ் அதிகாரியை அவருடைய காதலி, ஆதாரத்தை வைத்திருக்கும் பெண், ஒரு நேர்மையான கான்ஸ்டபிள் எப்படி திருத்துகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்தப் படத்தை ஹிந்தியில் ‘சிம்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்து கடந்த வாரம் வெளியிட்டார்கள். ரன்வீர் சிங், சாரா அலிகான், சோனு சூட் மற்றும் பலர் நடிக்க ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ புகழ் ரோகித் ஷெட்டி இயக்கியிருந்தார். கடந்த வாரம் வெளியான இந்தப் படம் மூன்றே நாளில் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்தியாவில் 70 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 30 கோடி ரூபாயும் வசூலித்து 2018ம் ஆண்டின் கடைசி 100 கோடி ரூபாய் படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் மூலம் தன்னுடைய 8வது 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார் இயக்குனர் ரோகித் ஷெட்டி. ‘சிம்பா’ படத்திற்கு முன்பாக ரன்வீர் சிங் நடித்து வெளிவந்த ‘ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத்’ ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக இருந்தன. தீபிகா படுகோனேவுடன் திருமணம் ஆன பின் ரன்வீர் சிங் நடித்து வெளிவந்த படம் சிம்பா. 2018ல் ரன்வீர் சிங், தீபிகா நடித்து வெளிவந்த ‘பத்மாவத்’ படமும் 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது. இந்த ஜோடி இதற்கு முன் இணைந்து நடித்த ‘பாஜிராவ் மஸ்தானி’ 184 கோடியும், ‘ராம் லீலா’ 116 கோடியும் வசூலித்துள்ளது. ரன்வீர் சிங்கின் நான்கு 100 கோடி படங்களில் மூன்று படங்களில் தீபிகா தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!