92 ன் திருட்டு 96 – புதிய சர்ச்சை

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 96. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கி இருந்தார். வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்தப்படம் இன்னமும் பல்வேறு தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

96 படம் திரைக்கு வந்த சில நாட்களில் அப்படத்தின் மீது சர்ச்சை எழுந்தது. அதாவது, சில வருடங்களுக்கு முன்பு 92 என்ற பெயரில் சுரேஷ் என்ற உதவி இயக்குனர் உருவாக்கிய கதையை, பிரேம்குமார் திருடி 96 என்ற பெயரில் படமாக இயக்கி உள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் 92 கதையை பாரதிராஜா தயாரிப்பதாகவும் இருந்தது. சுரேஷ் சொல்வது உண்மைதான், 96 படத்தின் கதை 92 கதையிலிருந்து திருடப்பட்டது என்று பாரதிராஜாவும் பகிரங்கமாக அறிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரேம் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவருடன் இயக்குநர்கள் தியாகராஜா குமாரராஜா, பாலாஜி தரணிதரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

பிரேம்குமார் பேசியதாவது : 92 கதைக்கும் 96 கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 96 படத்திற்கான முழு பவுண்டட் கதை என்னிடம் உள்ளது. 96 கதை என்னுடையது தான் என்பதை நிரூபிக்க ஆதாரம் உள்ளது. என் வாழ்வில் நடந்த சம்பவம் தான் இந்த கதை. பக்ஸ், பாலாஜி தரணிதரன், தியாகராஜா குமாரராஜா ஆகியோர் என்னிடம் கதை விவாதத்தில் இருந்தனர்.

ஒளிப்பதிவாளர் எப்படி படம் இயக்கலாம் என கேட்கின்றனர். பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக இருந்து தான் இயக்குநரானார். நான் பிலிம் இன்ஸ்டியுட்டில் படிக்கும்போதே குறும்படங்கள் இயக்கி உள்ளேன். அதனால் படம் இயக்குவது பெரிய விஷயம் அல்ல.

96 படம் தொடர்பாக என் மீது எழுத்தாளர் சங்கத்தில் சுரேஷ் புகார் கொடுத்தாலும், வழக்கு தொடர்ந்தாலும் அதை சட்டப்படி சந்திக்க நான் தயாராக உள்ளேன். என் பிள்ளை என்னுடையது என நிரூபிக்க வேண்டிய தருணம் இது.

இவ்வாறு பிரேம் குமார் கூறினார்.

Sharing is caring!