’96’ தெலுங்கில் ரீமேக்

தமிழ் சினிமாவில் 2018ம் ஆண்டு வெளிவந்த படங்களில் தனி முத்திரையைப் பதித்த படம் ’96’. அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா முதல் முறையாக இணைந்து நடித்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.

ராம், ஜானு என விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோரின் கதாபாத்திரங்களின் பெயர்கள் ரசிகர்கள் மத்தியில் பதியும் அளவிற்கு அந்தப் படம் இடம் பிடித்தது. அப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய தமிழ்ப் படம் வெளியாவதற்கு முன்பே வாங்கினார் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு.

தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நடிக்க சர்வானந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், நாயகியாக யாரை நடிக்க வைக்கப் போவது என்பதில் குழப்பம் இருந்தது. முதலில் த்ரிஷாவே நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது. அதன்பின் சமந்தா நடிப்பார் என்றார்கள். ஆனால், சமந்தா நடிப்பதில் சந்தேகம் நிலவியது.

’96’ படத்தைப் பார்த்த பின் சமந்தா, “த்ரிஷா, 96 பார்த்தேன். மை காட்…என்ன ஒரு நடிப்பு. எவ்வளவு அற்புதமாக நடித்துள்ளீர்கள் என்பதை எப்படி சொல்லி ஆரம்பிப்பது. உங்கள் நடிப்பு மாஸ்டர் கிளாஸ். நடிப்பதற்கு மிகவும் கடினமான ஒரு கதாபாத்திரம்,” என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

பின்னர் ரசிகர் ஒருவர் சமந்தா 96 ரீமேக்கில் நடிப்பாரா என்று கேட்டதற்கு, “96, கண்டிப்பாக ரீமேக் செய்யப்படக் கூடாது” என்று கூறியிருந்தார். அதனால், சமந்தா நடிக்க மாட்டார் என்றும் ஒரு தகவல் இருந்தது. இதனிடையே, தயாரிப்பாளர் தில் ராஜு, சமந்தாவிடம் தொடர்ந்து பேசி நடிக்க சம்மதம் வாங்கிவிட்டாராம். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Sharing is caring!