96 பற்றிய சுவாரசியம்

சிரித்து, அழுது, வலியுற்று, மறக்க முடியாமல் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டாடப் போகிறார்கள் இப்படத்தை என சிறப்பு காட்சிகள் பார்த்தவர்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

இத்தருணத்தில் படத்தின் இயக்குநர் சி.பிரேம்குமாருடன் பேசினோம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் உங்களுடைய கதை. அதாவது உங்கள் வாழ்வில் நடந்த கதை. இந்த 96 யாருடைய கதை?

இது முழுக்க முழுக்க புனைவுதான். நான் 1996 பேட்ச் மாணவன். சில ஆண்டுகளுக்கு முன் என் பேட்ச் பள்ளி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஒன்று கூடலுக்கு தஞ்சாவூரில் தாம் படித்த பள்ளியில் திட்டமிட்டார்கள்.

எல்லாரும் வாழ்வில் செட்டில் ஆகி இருக்கும் வயது. சிறிதாக ஒரு வீடு, ஒரு கார், கொஞ்சம் வங்கி இருப்பு, மாதம் ஈ.எம்.ஐ., ஒரு குழந்தை என எல்லோரிடமும் அந்த வயதில் சொல்ல அடர்த்தியான நினைவும், கதையும் இருக்கும் தானே?

அந்த நினவுகளை சுமந்து பள்ளி வந்தார்கள். ஆனால், துரதிருஷ்டமாக என்னால் அந்த ஒன்றுகூடலுக்கு செல்ல முடியவில்லை. பின், சென்றவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். அப்போது ஒரு நண்பன் பகிர்ந்த விஷயத்தை சொன்னார்கள். அதிலிருந்து உயிர் பெற்றதுதான் இந்த சினிமா. சிலரின் நினைவுகளை இந்தப் படம் சுமக்கிறது. ஆனால், இது முழுக்க முழுக்க புனைவுதான்.

35 வயதான புகைப்பட கலைஞன். அவனின் நட்பு, காதல் என அவன் வாழ்க்கைதான் இந்தத் திரைப்படம்.

இந்தப் படத்திற்குள் விஜய் சேதுபதி எப்படி வந்தார்?

விஜய் சேதுபதி பத்தாண்டுகளுக்கு மேலாக என் நண்பன். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. நானே இயக்கலாம் என்று இருக்கிறேன். நீ நடித்தால் நன்றாக இருக்கும் என சேதுபதியிடம் கதை சொல்ல தொடங்கிய போது, வேண்டா வெறுப்பாகதான் கதை கேட்க தொடங்கினார்.

‘கேமிரமேன்… என்னத்த கதை எழுதி இருப்பாரு? ஏதாவது கொரியன் படத்தோட காப்பியா இருக்கும். நண்பனாக வேறு போய்விட்டான். எப்படி முகத்திற்கு நேராக முடியாது என்று சொல்வது’ என ஒருவித அயர்ச்சியுடன்தான் கதை கேட்க தொடங்கினார். ஆனால், கதை சொல்லத் தொடங்கி முப்பதாவது நிமிடமே இது தனக்கான கதை என்று அவருக்கு புரிந்துவிட்டது. அதை அப்படியே சுவீகரித்து கொண்டார்.

படத்தின் இசையில் அதிகமாக வயலின் பயன்படுத்தப்பட்டிருப்பது போல இருக்கிறதே… இசையமைப்பாளர் கோவிந்த் வயலினிஸ்ட் என்பதுதான் காரணமா?

அவர் அற்புதமான வயலினிஸ்ட் என்பது மட்டும் இதற்கு காரணமல்ல… படத்திற்கு துருத்தாத எளிமையான இசை தேவைப்பட்டது. விஜய் போல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் பல்லாண்டுகால நண்பன். அவர் கதையை புரிந்து கொண்டார். எளிமையான இசைக் கருவிகளை மட்டும் பயன்படுத்தி வெறும் காற்றை இசையாக்கித் தந்திருக்கிறார்.

“திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன். புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன்” “இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா” என பாடல் வரிகளில் மெல்லிய தூரலின் லயம், ஜென் நிலை இருக்கிறதே?வெகு நாட்களுக்கு பிறகு திரைப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாட்டெழுதுகிறார் தானே?

“ஆம். நேத்தா அதிகமாக எழுதும் கலைஞன் கிடையாது. பாடல்களில் உள்ள ஜென் நிலைக்கு அவன்தான் காரணம். அவனே அப்படிபட்டவன்தான். அவன் பாடலை எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்பது கூட அவனுக்கு தெரியாது.

தெரிந்தாலும் மனதில் ஏற்றிக் கொள்ளமாட்டான். ‘”இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும்’ என்ற வரிகள் என் வீட்டில் வைத்து எழுதியது. என் வீட்டில் ஏராளமான பூனைகள் இருக்கின்றன. அவன் என் வீட்டில் உணர்ந்த அனுபவத்தை அப்படியே கவிதையாக்கி இருக்கிறான். சொல்லப்போனால் அந்த வரிதான் படமும் கூட.”

Sharing is caring!