மூன்றாவது திருமணத்திற்கு தயாரான பிரிட்னி ஸ்பியர்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (வயது 39) மூன்றாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது நீண்ட கால நண்பரான ஜேசன் ஆலன் அலெக்சாண்டரை பிரிட்னி ஸ்பியர்ஸ் திருமணம் செய்தார். எனினும், இந்த திருமணம் செல்லாது என அடுத்த 55 மணி நேரத்தில் நீதிமன்றம் அறிவித்தது. தனது செயல் குறித்த புரிதல் பிரிட்னி ஸ்பியர்ஸூக்கு இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

எனினும், அடுத்த சில மாதங்களிலேயே கெவின் பெடர்லைன் என்பவரை அவர் மணந்தார். ஆனால், இந்த திருமண வாழ்க்கையும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர்.

இதை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு முதல் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் கட்டுப்பாட்டில் இருந்து வந்தார். இதனால் தனது பொருளாதாரம் சார்ந்த, வாழ்க்கை சார்ந்த எந்த ஒரு முடிவையும் எடுக்கும் உரிமை பிரிட்டனி ஸ்பியர்ஸூக்கு மறுக்கப்பட்டது.

குறிப்பாக தனது நீண்டகால காதலரான நடிகரும், உடற்பயிற்சி பயிற்சியாளருமான சாம் அஸ்காரியை (27) திருமணம் செய்து கொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

எனவே, தனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில், பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வெளியேற அனுமதி வழங்கி நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், பிரிட்னி ஸ்பியர்ஸ் தனக்கும் தனது நீண்டகால காதலர் சாம் அஸ்காரிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தற்போது அறிவித்துள்ளார். இது தொடர்பாக காதலர்கள் இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். எனினும் திருமணம் எங்கு, எப்போது நடைபெறும் என்பதை அவர்கள் அறிவிக்கவில்லை.

Sharing is caring!