‘படையப்பா’ பாடலை சுட்டாரா இமான்..? – சமூக வலைதளங்களில் சர்ச்சை..!

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் இமான் இசையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘அண்ணாத்த அண்ணாத்த…’ என்ற பாடலை நேற்று வெளியிட்டனர்.

இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், பாடல் வெளியான 16 மணி நேரத்தில் 28 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.

அதேசமயம், இந்தப் பாடல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரஜினி நடித்த ‘படையப்பா’ படத்தில் வரும்  ‘என் பேரு படையப்பா…’ எனும் பாடலை சுட்டு, மெட்டுகளை கம்ப்யூட்டரில் கொஞ்சம் மெருகேற்றி இமான் கொடுத்துள்ளதாக சமூக வலைதங்களில் சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.

இரண்டு பாடல்களின் பின்னணியில் வரும் மெட்டு ஒரே மாதிரியாக இருக்கிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இரண்டு பாடல்களையும் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இமான், இதற்கு முன்னரும் இதுபோன்று காப்பி சர்ச்சையில் சிக்கினார். அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் வரும் ‘வேட்டி கட்டு…’ பாடல், அரசன் சோப் விளம்பரத்தை சுட்டு எடுக்கப்பட்டதாக அந்த பாடல் வெளியான போது ஒரு சர்ச்சை ஓடியது.

அதேபோன்று ரஜினிக்கும் இது மாதிரி காப்பி சர்ச்சை புதிதல்ல. இதற்கு முன் அனிருத் இசையில் ரஜினி நடிப்பில் வெளியான ‘தர்பார்’ படத்தின் ‘நான் தாண்டா இனி மேலு…’ என்ற பாடல் ஐயப்ப சுவாமி பாடலை தழுவி எடுக்கப்பட்டதாக அப்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகமாக டிரோல் ஆனது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!