உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் செய்வது எப்படி..

சுவையான உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்..

சப்பாத்திக்கு..

கோதுமை மா – 2 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு

மசாலாவிற்கு..

உருளைக்கிழங்கு – 2-3 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
கரட் – 1 (நறுக்கியது)
குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1-2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 கரண்டி
மிளகாய் தூள் – 1 கரண்டி
சீரகம் – 1/2 கரண்டி
கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு

செய்முறை..

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கி, பின் கேரட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு காய்கறிகள் வேகும் வரை வதக்க வேண்டும்.

பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை வதக்க இறக்க வேண்டும்.

அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சப்பாத்தி மாவை சப்பாத்திகளாக தேய்த்து நெய் சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும். இறுதியில் இந்த சப்பாத்திகளின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை தேய்த்து அதனை சுருட்டி பரிமாற வேண்டும். வேண்டுமெனில் உருளைக்கிழங்கு மசாலா வைத்த பின், அதன் மேல் தக்காளி சோஸ் ஊற்றி சுருட்டி பரிமாறலாம்.

இப்போது சுவையான உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் ரெடி!!!

இரவில் சப்பாத்தி செய்து எஞ்சியிருந்தால் வேண்டுமெனில் காலையில் அதனைக் கொண்டும் உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் செய்யலாம்.

Sharing is caring!