சப்பாத்தி, தோசைக்கு சூப்பர் சுவையில் மீன் தொக்கு சைட் டிஷ்!!!

சாதம், சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த மீன் தொக்கு செய்து பாருங்கள். அருமையான சுவையில் வித்தியாசமான சைட்டிஷ் ஆக இருக்கும்.

தேவையான பொருட்கள்: துண்டு மீன் – முக்கால் கிலோ, வெங்காயம் – 1, தக்காளி – 1, மிளகாய் வற்றல் – 2, பச்சை மிளகாய் – 2, புளி – சின்ன நெல்லிக்காய் அளவு, இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி,
மிளகு தூள் – 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி,
தனியா தூள் – 3 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி,
கடுகு – 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீன் துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி வைக்கவும். புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு பச்சை வாசம் போனதும், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டவும். அடுத்து அதில் புளிக்கரைசல் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக கொதிக்க விட்டவும்.

திக்கான பதம் வந்தவுடன் மீன் துண்டுகளை சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டு வேக விடவும். தொக்கு பதம் வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சூப்பரான மீன் தொக்கு ரெடி.

Sharing is caring!