சமையல் பிரச்சினைகள்….பயனுள்ள குறிப்புக்கள்

கோதுமை மாவில் உப்பு சேர்த்து, லேசாக சுட வைத்த நீர் விட்டு கெட்டியாக பிசைந்து, இத்துடன் துருவிய கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர், பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கி அடை செய்தால் சத்தான சுவையுடன் கூடிய அடை ரெடி.

இட்லி மாவில் உளுந்து போதாமல் மாவு கெட்டியாக இருந்தால் பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்சியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து அதற்கு பின், இட்லிகள் வார்த்தால் இட்லி பூ மாதிரி இருக்கும்.

கிழங்குகள் சீக்கிரம் வேக வேண்டுமா? பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து வேக வைத்தால் எளிதில் வெந்து விடும்.

கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

தானியம் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவது ஒரு எளிய வழி.

உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து வெஜிடபிள் போண்டா செய்யலாம்.

மழைக்காலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடும்.அந்த சமயத்தில் நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வையுங்கள்.உப்பில் தண்ணீர் படியாமல் இருக்கும்.

உளுந்தை கொஞ்சம் குறைவாகப் போட்டு கெட்டியாக அரைத்து இட்லி வார்க்கும் போது ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் விட்டு கலக்கி இட்லி வார்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் வரை கெட்டுப் போகாமலும் இருக்கும்.பயணம் செல்லும் போது இது போன்ற முறையில் இட்லி செய்யலாம்.

தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சாதங்களை தயாரிக்கும் போது பொட்டுக் கடலையை வறுத்து கொட்டினால் மிகவும் சுவையாக இருக்கும்.

இடியாப்பம் செய்து நிறைய மீந்து விட்டதா? அதை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்து நிழலில் உலர்த்தி வற்றலாக்கி விடுங்கள்.நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.தேவையான போது வறுத்து சாப்பிடலாம். நல்லெண்ணெயில் வறுப்பது அதிக சுவையை கூட்டும்.

பிரட்டின் மேல் பகுதியை அதாவது பழுப்பு நிற பகுதியை தனியாக எடுத்து மிக்ஸியில் அரைத்து அத்துடன் பாதி அளவு அரிசி மற்றும் கடலை மாவு சம அளவு கலந்து, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அப்பம் ஊற்றினால் சுவையாக இருக்கும்.

Sharing is caring!