சுவையான ஆந்திரா பாகற்காய் குழம்பு!!

பொதுவாக பாகற்காயை அதிகம் சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அது உண்மை தான். ஆகவே வாரத்திற்கு ஒரு முறை பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால் அதில் உள்ள கசப்புத் தன்மையால் உடலில் தங்கியுள்ள பூச்சிகள் அனைத்து வெளியேறி சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

அதிலும் இந்த பாகற்காயை குழம்பு வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அந்த வகையில் இப்போது ஆந்திரா ஸ்டைலில் எப்படி பாகற்காய் குழம்பு வைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பாகற்காய் – 4-5 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 4
மல்லி – 1 மேசைகரண்டி.
சீரகம் – 1 தேக்கரண்டி.
எள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி பசை – 2 தேக்கரண்டி
உள்ளி பசை – 2 தேக்கரண்டி
தக்காளி சாறு – 1/4 கோப்பை
சீனி – 2 மேசைக்கரண்டி
புளிச்சாறு – 2 மேசைகரண்டி

செய்முறை..

முதலில் பாகற்காயை நீரில் கழுவி விட்டு அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு வேண்டிய அளவில் நறுக்கிக் கொண்டு உப்பு சேர்த்து கிளறி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் அதனை சிறிது நீர் சேர்த்து கழுவிக் கொண்டு நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மிளகாய், மல்லி, சீரகம் மற்றும் எள் சேர்த்து தீயை குறைத்து வைத்து, பொன்னிறமாக வறுத்து குளிர வைக்க வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு மெதுவாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாகற்காயை போட்டு 4-5 நிமிடம் சற்று பொன்னிறமாக வறுத்த பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் இஞ்சி மற்றும் உள்ளி பசையை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தக்காளி சாற்றை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் அரைத்து வைத்திருக்கும் பொடி, சீனி , புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து 1 கோப்பை தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு ரெடி.

Sharing is caring!