சுவையான பீட்ரூட்- தேங்காய் சூப் எப்படி தயார் செய்வது?

சத்தான மற்றும் சுவையான பீட்ரூட்- தேங்காய் சூப் எப்படி தயார் செய்வது என்பதை இதில் காண்போம்.

விதவிதமான உணவுகள் சாப்பிடுவது என்றால் அனைவருக்கும் பிடித்தமான விஷயம்தான். தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட விரும்பாதவர்கள், இதுபோல் சில உணவுகளை முயற்சித்து பார்க்கலாம். காய்கறிகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தக் கூடியவைகளில் முக்கியமானது காய்கறிகள். சில காய்கறிகளை தண்ணீரில் கழுவி அப்படியே சாப்பிடலாம். மற்றவைகளை உங்களுக்கு பிடித்த மாதிரி பொரியல் செய்தோ, சூப் போல் தயாரித்தோ சாப்பிடலாம். அந்த வகையில் உடலுக்கு அதிக பலனை தரும் பீட்ரூட்- தேங்காய் சூப் எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கே காண்போம்.

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் (தோலுரித்தது)- 2

வெங்காயம்- 1

இஞ்சி- 2 கிராம்

பச்சை மிளகாய்- 1

தேங்காய் எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய் பால்- 100 மி.லி

தேங்காய் கிரீம்: 10 மி.லி

உப்பு மற்றும் மிளகுத்தூள்

செய்முறை:
பீட்ரூட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரம் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், மிளகாய், இஞ்சி, பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
அதன்பிறகு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
இதனையடுத்து இந்த கலவையை அரைத்து மீண்டும் கொதிக்க வைக்கவும்.
அதில் தேங்காய் பால் மற்றும் தேங்காய் கிரீம் சேர்த்து சூடாக பருகுங்கள். உங்களுக்கு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

பீட்ரூட்- தேங்காய் சூப் உங்களது தொண்டைக்கு இதமான உணர்வை கொடுக்கும். ரத்தத்தை சுத்திகரிப்பதற்கும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும் பீட்ரூட் உதவும். அதனால் பீட்ரூட்டை கண்டிப்பாக உங்கள் உணவில் சேர்க்க மறக்காதீர்கள்.

Sharing is caring!