சுவையான மொறுமொறுவென்று ‘முருங்கைப்பூ வடை’ 10 நிமிடத்தில் எப்படி செய்வது?

வாழைப்பூவில் தான் வடை செய்ய வேண்டுமா என்ன? முருங்கை பூவிலும் சூப்பராக மொறுமொறுவென்று பத்து நிமிடத்தில் வடை சுட்டு எடுக்க முடியும். முருங்கை மரம் முழுவதும் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. முருங்கைக்கீரை முதல் அதன் காம்பு வரை, முருங்கைக்காய், முருங்கைப்பூ என்று ஒவ்வொன்றுமே மனிதனின் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தனை சத்துக்களையும் கொண்டு நம் கண் முன்னே சாதாரணமாக நிற்கிறது. அத்தகைய முருங்கைப்பூவில் வடை எப்படி செய்வது என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்தியா முழுவதும் முருங்கை மரம் இல்லாத வீடுகள் மிக குறைவாக தான் இருக்கும். முருங்கை மரத்திலிருந்து நாம் முருங்கைக் கீரையை பறித்து பொரியல் செய்வோம் அல்லது சாம்பார் செய்வோம். முருங்கைக்காயை பயன்படுத்திக் கொள்வோம். ஆனால் அதில் இருக்கும் பூக்களை மட்டும் அவ்வளவாக யாரும் பயன்படுத்துவது இல்லை. சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேதத்திலும் முருங்கை பூவின் பயன் அதிகமாகவே தேவைப்படுகின்றன.

இன்றைய நவீன யுகத்தில் புத்தகத்தை விட கணினியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். எல்லார் கைகளிலும் கம்ப்யூட்டர், செல்போன் தான் சகோதர சகோதரியாக கூடவே தவழ்ந்து கொண்டிருக்கிறது. அருகில் அமர்ந்திருக்கும் சகோதரனுக்கு கூட செல்போனில் மெசேஜ் அனுப்பி பேசிக் கொள்ளும் நிலைமை வந்துவிட்டது. யாரும் யாருடைய கண்களையும் பார்த்து பேசுவதே குறைந்துவிட்டது. இப்படி கம்ப்யூட்டர், செல்போனை அதிக அளவில் பயன்படுத்துபவர்களின் கண்கள் விரைவிலேயே மங்கி விடுகின்றன. கண்கள் விரைவில் வறண்டு இதனால் தலைவலியும் வந்துவிடும். கண்களுக்கு ஓய்வு கொடுக்காததால் அதன் சிமிட்டும் தன்மையும் தற்போது குறைந்து வருவதை கவனித்து பாருங்கள். மண்டைக்குள் பட்டாம்பூச்சியும், கண்களுக்கு முன்னே மின்மினி பூச்சியும் பறப்பது போல் தோன்றும். இதுபோன்ற நிலை உண்டானால் கண்களை நீங்கள் பாதுகாக்க வேண்டியது அவசியமாக மாறிவிடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இத்தகைய குறைபாடுகளை நீக்கவும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர, நரம்பு தளர்ச்சி நீங்க, பித்தம் குறைய, மன உளைச்சல், மன அழுத்தம் நீங்க, உடல் அசதி, சோர்வு அடிக்கடி கோபப்பட தோன்றுவது போன்ற எண்ணங்களை முருங்கை பூவின் மகிமையால் நிச்சயம் மாற்றிக் காட்ட முடியும். முருங்கைப்பூ வடை செய்ய தேவையான பொருட்கள்: முருங்கைப்பூ – 1 கப், துவரம் பருப்பு – 1/2 கப், கடலை பருப்பு – 11/2 கப், காய்ந்த மிளகாய் – 4, மஞ்சள் தூள் – சிறிது, சீரகம் – 1/2 டீஸ்பூன், தயிர் – 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை விளக்கம்: முருங்கைப்பூவை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்த தண்ணீரில் போட்டு வைக்கவும். சிறிது நேரத்திற்குப் பிறகு அதை வடித்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஊறவைத்து, பின்னர் நீர் முழுவதும் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து கரகரப்பாக கெட்டியாக மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கி வைத்த முருங்கைப் பூவைப் போட்டு, தயிர் சிறிது சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதில் நீங்கள் விருப்பப்பட்டால் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இல்லை என்றால் விட்டு விடலாம். இப்போது சின்ன சின்ன வடைகளாக தட்டி சூடாக இருக்கும் எண்ணெயில் இருபுறமும் திருப்பி திருப்பி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதாங்க, சூடான சுவையான ஆரோக்கியத்தின் தலைவியாக விளங்கும் முருங்கைப்பூ வடையை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து உங்கள் கண்களையும், மனதையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Sharing is caring!