சுவையும் மணமும் சப்புக்கொட்டவைக்கும் கறிவேப்பிலைக் குழம்பு

என்னதான் ஆரோக்யம் குறித்த கட்டுரைகளைப் படித்தாலும் அவசியமான அதிக சத்துக்களைக் கொண்டிருக்கிறது என்று கறிவேப்பிலையைப் பற்றி சொன்னாலும் குழம்பிலும், பொரியலிலும், சட்னியிலும் மிதக்கும் கறிவேப்பிலை தரையில் தான் வீணாகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு விதிவிலக்கல்ல.

அதனால் தான் அம்மாச்சிகள் இட்லிப்பொடி, பருப்பு பொடி, கறிவேப்பிலைப் பொடி, பூண்டு பொடி, தூதுவளைக்கீரை பொடி, வல்லரைப்பொடி என்று வித விதமான பொடிகளை சாப்பிட பழக்கினார்கள். எல்லாவற்றிலும் நீக்கமற கறி வேப்பிலையைக் கலந்தார்கள். அதனால் உள்ளுக்குள்ளும் கறிவேப்பிலை சத்து சீராக சென்றிருந்தது. தற்போது மாறிவரும் உணவுப்பழக்கங்களால் கறிவேப்பிலையின் பயன்பாடு குறைந்துவருகிறது.

உணவு மாற்றம் குறித்து போதிய விழிப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில் கறிவேப்பிலையை சாப்பிடாவிட்டாலும் அதைப் பொடி செய்தோ அல்லது துவையலாக்கியோ அல்லது குழம்புவைத்தோ கொடுக்கும் போது அப்படியே அதன் சத்துக்கள் உடலுக்குள் செல்கிறது. குழந்தைகளுக்கும் இந்த கறிவேப்பிலைக் குழம்பின் சுவை மீண்டும் மீண்டும் சுவைக்கத்தூண்டும் வகையிலேயே இருக்கும். கறிவேப்பிலை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

தேவையான பொருள்கள்:
கறிவேப்பிலை- 2 கப், சாம்பார் வெங்காயம் –  2 கப், தக்காளி -3, பூண்டு- 10 பற் கள், புளி- எலுமிச்சையளவு, மிளகாய்த்தூள் – 5 டீஸ்பூன், தனியாத்தூள்-3 டீஸ் பூன், மிளகு-3 டீஸ்பூன்,வெந்தயம் -3 டீஸ்பூன், சீரகம் -1 டீஸ்புன், மஞ்சள் தூள் -1 டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய்- தேவைக்கேற்ப, தாளிக்க- வடகம் தேவையான அளவு.

செய்முறை:
மிக்ஸியில் சாம்பார் வெங்காயம் 1 கப், தக்காளி 2 ஐ நறுக்கி மைய அரைக் கவும், மிளகு சீரகம், வெந்தயத்தை இலேசாக வறுத்து பொடித்து வைக்கவும். கறிவேப்பி லையைச் சுத்தம் செய்து அலசி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வும். சட்டியில் நல்லெண்ணெய் விட்டு வடகம் தாளித்து எஞ்சிய சாம்பார் வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.

பிறகு மிக்ஸி யில் அரைத்த வெங்காயம் தக்காளி விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்த மிளகு பொடியைச் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி, வேண்டிய நீர் சேர்த்து கொதிக்கவிடவும். புளிவாசனை போக நன்றாக கொதித்ததும் இறக்கும் போது உப்பு, மைய அரைத்து வைத்த கறிவேப்பிலையை ஊற்றி ஒரு கொதிவிட்டு இறக்கி மீண்டும் நல்லெண்ணெய் சேர்க்கவும்.

Sharing is caring!