சைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

சைவ பிரியர்களுக்காக மட்டன், சிக்கன் தயாரித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.

லண்டனில் உள்ள சில விஞ்ஞானிகள் சோதனைக் குழாய் மூலம் செயற்கையான இறைச்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பல மாத ஆராய்ச்சிக்கு பின் உயிருள்ள பசுவின் ஸ்டெம் செல்லில் இருந்து ஒரு வித பசையை எடுத்து அதை சோதனைக்குழாயில் வைத்து வளர்த்து மாட்டிறைச்சியை உருவாக்கினர். இதற்கு “பிராங்கன் பர்கர்” என்று பெயரிட்டனர்.

கடந்த வாரம் நெதர்லாந்து நாட்டின் விஞ்ஞானி ஜொப் கோர்ட்டேவெக், சைவ மட்டன், சிக்கனை உருவாக்கி பெரும் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு இவர் பயன்படுத்திய பொருட்கள் எல்லாமே சைவ, இயற்கை தாவரங்கள் மற்றும் மூலிகைகள் தான்.

நெதர்லாந்தின் ஹாக் நகரில் தன்னுடைய ஆராய்ச்சி நிலையத்தில் பல மாதங்களாக இது தொடர்பாக ஆராய்ச்சி செய்து வந்தார் கோர்ட்டேவெக்.

சோயா எண்ணெயில் இருந்து பசை போன்ற திரவத்தை உருவாக்கி, அதை ஒரு அடர்த்தியை தரும் கருவியில் வைத்து சிக்கன் போன்ற உருவத்துடன் உணவு வகையை உருவாக்கினார்.

அதன் பின் சிக்கன் சுவை கிடைப்பதற்காக தொழில்நுட்ப ரீதியாக சில மூலிகைகளை சேர்த்துள்ளார். இந்நிலையில் சூப்பர் சைவ சிக்கன் தயாரித்து விஞ்ஞானிகள் சிலருக்கு விருந்து படைத்தார்.

இதுதவிர சோயா போலவே வேறு காய்கறி, மூலிகைகள், தாவரங்களை வைத்து மட்டன் உருவாக்க விரும்பி அதற்கான ஆராய்ச்சிகளை செய்து வெற்றியும் கண்டுள்ளார்.

சோயாவுக்கு பதிலாக கரட், உருளைக்கிழங்கு, பட்டாணி போன்றவற்றை வைத்து அதே கருவியில் மிகுந்த வெப்பத்தில் நூலிழைகள் போல ஒரு உணவுப் பொருளை உருவாக்கி அத்துடன் தானிய வகைகளை சேர்த்து தொழில்நுட்பத்தின் மூலம் மட்டன் உருவாக்கினார்.

அசல் மாட்டிறைச்சி போலவே இருப்பதாக அதை ருசித்த சக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பத்திரிக்கையாளர்களையும் அழைத்து விருந்து வைத்த விஞ்ஞானிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து கோட்டேவெக் அசைவ பிரியர்கள் கூட சைவத்துக்கு மாற தயாராகி விட்டனர். அவர்களுக்காக தான் நான் இந்த கண்டுபிடிப்பை உருவாக்கினேன்.

இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது ஏற்கனவே நான் விற்று வரும் சைவப் பொருட்களின் வரிசையில் இனி சைவ மட்டன், சிக்கன் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.

ஹக் நகரின் பிரதான சாலையில் உள்ள கோட்டேவெகின் சுப்பர் மார்க்கெட்டில் மூன்று ஆண்டுகளாகவே சைவ பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹேம்பர்கர், மீட்போல்ஸ், டுனா சலட் போன்றவற்றை விற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!