தீபாவளி திருநாளில் உண்டு மகிழ்ந்திட என்றும் சுவையான யாழ்ப்பாண பலகாரம்..!சுவைத்து பாருங்கள்..!

இது நம்மவர்கள் உணவல்ல. இந்தியர்களின் சிற்றுண்டிகளில் ஒன்று. ஆனாலும் 50 வருடங்களுக்கு முன்பே எனது சிறு வயதில் இலங்கையின் வடபகுதியில் கோயில் திருவிழாக்களில் விசேடமாக அமைக்கப்பட்ட கடைகளில் தேன்குழல் என வாங்கி உண்ட ஞாபகங்கள் பசுமையாக மனதில் உண்டு. தற்போது இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளிலும் இனிப்பு பண்டங்கள் விற்கும் நம்மவர்கள் கடைகளில் விற்கப்படுகிறது. சித்திரை வருடப்பிறப்பிற்கு உரிய எமது பலகாரவகைகள் எல்லாம் முன்பே இங்கு பகிர்ந்துவிட்டேன். ஆனபடியால் புதிதாக இந்த இந்தியச் சிற்றுண்டி செய்முறையைப் பகிர்கின்றேன்.

தேவையான பொருட்கள்: 2 சுண்டு உழுந்து ஊறவைத்து தோல் நீக்கவும்.,3 மேசைக்கரண்டி வெள்ளை அரிசிமா – [அவசியமானதல்ல],பொரிப்பதற்கு தேவையான எண்ணை,1 சுண்டு சீனி,1/2 சுண்டு தண்ணீர்,1/4 கிராம் குங்குமப்பூ அல்லது 1/2 தேகரண்டி ஓரேஞ் நிறம் ( கேசரி பவுடர்),1 தேக எலுமிச்சைப் புளி,1தேக ரோஸ் எசன்ஸ்


செய்முறை:நன்றாக ஊறவைத்த உழுந்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடைக்கு அரைப்பது போல் இறுக்கமான பசையாக அரைத்து எடுக்கவும்.அரைத்த உழுந்து தண்ணீர்தன்மையாக இருந்தால் அதனுள் 1-3 மேசைக்கரண்டி பச்சையரிசி மாவை சேர்த்து குழைத்து இறுக்கமான பசையாக எடுக்கவும்.இந்த உழுந்து விழுதை ஒரு ஐசிங் பையில். அல்லது ஒரு நெகிழி பையில் போட்டு அந்த பைகளின் நுனியில் சிறிதாக வெட்டிவிடவும். அல்லது ஒரு துணியின் நடுவில் துளையிட்டு அதில் உழுந்து விழுதை வைத்து பொட்டலமாக கட்டி எடுக்கவும்.


ஒரு பாத்திரத்தில் 1 சுண்டு சீனியையும் 1/2 சுண்டு தண்ணீரையும் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். சீனி கரைந்து இரண்டு தரம் கொதித்த பின்பு பாணி கம்பிப் பதம் வரும் முன்பு அடுப்பில் இருந்து இறக்கி அதனுள் தூளாக்கிய குங்குமப்பூ, ரோஸ் எசன்ஸ், சிறிதளவு எலுமிச்சைச்சாறு என்பவற்றைச் சேர்த்து கலக்கி வைக்கவும்.பொரிக்கும் சட்டியில் எண்ணையை விட்டு சூடாக்கவும்.


எண்ணை மெல்லிய சூடாக இருக்கும் பொழுது அதில் வளையங்களாக அரைத்த உழுந்தைப் பிழிந்து இரு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து அதனை சீனிப் பாகில் போட்டு ஊறவிடவும். இருபக்கமும் திருப்பிப் போட்டு ஊறவிடவும். முதல் தடவை பொரித்து சீனிப்பாகில் போட்ட வளையங்களை இரண்டாவதாக பொரிக்கும் வளையங்கள் பொரிந்து தயாராக வரும்வரை சீனிப்பாகில் ஊறவிடவும்.

Sharing is caring!