தெம்பூட்டும் மசாலா பால்: செய்முறை விளக்கம்!

பொதுவாகவே, சிறுபிள்ளைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் உடலில் சத்துக்குறைபாடு ஏற்படுகிறது. இதை போக்க சிறந்த வழி, சத்து மிகுந்த ஆகாரங்களை எடுத்துக்கொள்வது மட்டுமே. இன்றை ரசாயன யுகத்தில், பூச்சு மருந்து இல்லாத இயற்கை உணவை காண்பதே அரிதாகிவிட்டது.

இந்த சூழ்நிலையில், புரதம், கார்போஹைட்ரேட், நார்சத்து உள்ளிட்டவை கிடைக்கும் வகையில், ட்ரை புரூட் எனப்படும் உலர் பழங்கள், கொட்டை வகைகளை தினமும் சிறிதளவு எடுத்துக்கொண்டால் நல்லது. ஆனால், நம்மில் பலருக்கும் அவற்றை நேரடியாக உண்ண நேரம் கிடைப்பதில்லை!

பலருக்கு சோம்பேறித்தனம் என்றே கூறலாம். அதில், பாதாம் போன்ற பருப்புகளை குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை. எனவே, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில், முக்கிய ட்ரை புரூட்களை சேர்த்து அரைத்து மசாலா பால் பொடி தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

முந்திரி, பாதாம், பிஸ்தா உடைத்தது ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு வெறும் வாணலியில் வறுத்து, அத்துடன் சிறிதளவு ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

விருப்பம் இருப்பின் சர்க்கரையையும் சேர்த்து அரைக்கலாம். இல்லையென்றால், அதை பாலுடன் தனியாக சேர்த்துக் கொள்ளலாம்.

நன்கு பொடியானதும் அதை, ஒரு டப்பாவிலோ, மூடி உள்ள பாத்திரத்திலோ எடுத்து வைக்கவும். தினமும், காலை, இரவு, ஒரு டம்பளர் பாலில், ஒரு ஸ்பூன் இந்த மசாலா பொடியை சேர்த்து பருகினால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், தெம்புடன் இருக்கலாம்.

Sharing is caring!