புதுவிதமான ஊத்தப்பம்! ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க.

மாவு இல்லாமல் எப்படி ஊத்தப்பம் செய்வது? அரிசியை ஊற வைத்து மாவு அரைத்து, சில ஆரோக்கியமான பொருட்களை சேர்த்து, ஊத்தப்பம் போல் தோசையை தடிமனாக ஊற்ற போகின்றோம். சாதாரணமாக நாம் செய்யும் ஊத்தப்பம் போல் இது கிடையாது. கொஞ்சம் வித்தியாசமானது. காலை உணவுக்கு இது சிறப்பானது! இரவு நேரத்திலும் இந்த தோசையை சுட்டு சாப்பிடலாம். சுலபமான, ஆரோக்கியமான இந்த ஊத்தப்பம் தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாமா? முதலில் இரண்டு கப் அளவு அரிசியை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். அந்த அரிசி 4 மணி நேரம் அப்படியே ஊறட்டும். அரிசி 4 மணி நேரம் ஊறிய பின்பு, மூன்று முறை கழுவி, மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் விட்டு நைசாக அரிசியை அரைத்துக் கொள்ள வேண்டும். தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி மாவு, அரைத்தால் போதும். ஒரு பெரிய உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த உருளைக்கிழங்கு, தயிர் 2 டேபிள் ஸ்பூனை, அரிசி மாவோடு சேர்த்து மிக்ஸி ஜாரில் இறுதியாக ஒரு ஓட்டு ஓட்டி கொள்ளுங்கள்.

இப்போது தோசை மாவு பக்குவத்திற்கு, மாவு தயாராக உள்ளது அல்லவா? அதில் வெங்காயம் -1, கேரட் -1, குடை மிளகாய் – 1/2, தக்காளி – 1, கொத்தமல்லி தழை – தேவையான அளவு, பச்சை மிளகாய் – 1, இஞ்சித் துருவல் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி தயாராக வைத்திருக்கும் தோசை மாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக மிளகுத் தூள் – 1/2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். தோசை சுடுவதற்கு முன்பு, ஒரு கிண்ணத்தில், உங்கள் வீட்டில் இட்லி பொடி இருந்தால், அந்த இட்லி பொடி ஒரு ஸ்பூன், மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு போட்டு, கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

தயாராக வைத்திருக்கும் மாவில் இப்போது தோசை ஊற்ற போகின்றோம். இந்த தோசையை தோசைக்கல்லில் ஊற்றி சாப்பிடலாம் அல்லது, குட்டி ஃபேன் போல் உங்கள் வீட்டில் ஏதாவது இருந்தால், அந்த பேனில் இந்த மாவை தடிமனாக ஊற்றி, மிதமான தீயில் வேக வைத்தும் சாப்பிடலாம். தோசைக்கல் நன்றாக சூடானதும், ஒரு குழி கரண்டி அளவு மாவை எடுத்து ஊற்றி, மெல்லிசாக எல்லாம் தேய்க்க முடியாது. சிறிய வட்ட வடிவில் ஊத்தப்பம் போல் ஊற்றி, மேலே இட்லி பொடி மசாலாவை தூவி, மிதமான தீயில் வேக வைத்து, எண்ணையோ அல்லது நெய்யை ஊற்றி, சிவக்க வைத்து எடுத்தீர்கள் என்றால் சூப்பரான காலை டிபன் தயார்! இதன் சுவை வித்தியாசமாக இருக்கும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னி, இப்படி எது வேண்டும் என்றாலும் தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளலாம்.

Sharing is caring!