பூசணிப் பொரியல்
பூசணிக்காய் .. பொங்கலன்று கண்டிப்பாக இடம்பெற வேண்டிய முக்கியமான காய்கறிகளில் ஒன்று. மார்கழி மாதம் முதலே என்னை கவனி கவனி என்று கண்களைக் கவரும் பூசணியைப் பொரியலாக்கி படைப்போம். பூப்போன்ற சுனை இருப்பதால் இந்தக் காயை பூஞ்சுனைக்காய் என்று அழைத்தனர். இவையே நாளடைவில் பூசணிக்காயாக மருவிவிட்டது. இது இனிப்பு தன்மையைக் கொண்டவை. கிராமப்புறங்களில் வீட்டின் புழக்கடை பகுதியில் பூசணியை விதைத்திருப்பர். பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டத்தில் பூசணியின் வரவும் சேரும். காரம் சேர்த்த பூசணி பொறியலை, சர்க்கரைப் பொங்கலுடன் பூசணி இலையில் வைத்து சாப்பிடும்.. சுவை இருக்கிறதே.. காரமும்… இனிப்பும் சேர்ந்த கலவையும் அருமையாக இருக்கும் என்று உணரும் தருணம் இதுதான்…பூசணி பொரியலை எப்படிச் செய்வது பார்க்கலாமா? மிக மிக எளிமையாக செய்யக்கூடிய பொரியல் இது.
தேவையான பொருள்கள்:
பூசணி – அரைக்கிலோ
சாம்பார் வெங்காயம் – 1 கப்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன் (காரம் கூட இருப்பது நல்லது)
உப்பு, எண்ணெய் -தாளிக்க தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம், வெந்தயம் – தலா 3 டீஸ்பூன்
உ.பருப்பு, க.பருப்பு – தலா 2 டீஸ்பூன்
வரமிளகாய் -1
கறிவேப்பிலை- தேவைக்கேற்ப
தண்ணீர் – தேவைக்கேற்ப
வெல்லத்தூள் – 5 டீஸ்பூன்
செய்முறை:
பூசணியின் விதைகளை மட்டும் நீக்கி,தோலுடன் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், வெந்தயம், உ.பருப்பு, க.பருப்பு, வரமிளகாய் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய சாம்பார் வெங்காயத்தைச் சேர்க்கவும். நறுக்கிய பூசணி துண்டுகளைச் சேர்க்கவும். நன்றாக வதக்கி, வேண்டிய தண்ணீர் சேர்க்கவும். (பூசணி மென்மையானது என்பதால் விரைவில் வெந்துவிடும்) பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வேகவிடவும். இறக்கும் போது உப்பு , வெல்லத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். இனிப்பும் காரமும் கலந்து எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான சுவையில் நாவில் நீண்ட நேரம் இனிக்கும். பூசணி இலையும் பூசணி பொரியலும் இல்லாமல் பொங்காது பொங்கல் பண்டிகை.