மக்கன் பேடா செய்யுங்கள்… வீட்டில் உள்ளவர்களை குஷிப்படுத்துங்கள்…!

சென்னை:
வீட்டில் இருக்கிறீர்கள். அனைவருக்கும் விடுமுறை ஏதாவது ஸ்வீட் செய்து தர விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக மக்கன்பேடா.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு 1 கப், சர்க்கரை சேர்க்கபடாத கோவா 1/2 கப், 1/4 கப் வெண்ணை, ஆப்ப சோடா 1/2 தேக்கரண்டி, பாதாம் 10, முந்திரி 10,
கிஸ்மிஸ் பழம் 15, கடலெண்ணய் பொறிப்பதற்கு தேவையான அளவு.
சர்க்கரை 3 கப், நாட்டு சர்க்கரை 1 கப், தண்ணீர் 3 1/2 கப். வெண்ணிலா எசன்ஸ் 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள் நிற கேசரி பொடி ஒரு சிட்டிகை.

செய்முறை:
கனமான அகன்ற பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை சேர்க்கப்படாத கோவா தயிர், ஆப்ப சோடா உப்பு, வெண்ணை மற்றும் தேவையான சிறிது துளிகள் தண்ணீர் சேர்க்கவும். நன்றாக அழுத்தி கட்டிகள் அல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும். இதை ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.

ஒரு அகன்ற கனமான பாத்திரத்தில் நாட்டு சர்க்கரையை போட்டு அதில் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். அதை சிறுதீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். அதில் இருக்கும் குப்பை மற்றும் மண்ணை வடித்து கொள்ளவும். மற்றுமொரு அடிகனமான அகன்ற பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து அதனுடன் தண்ணீரும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்

இரண்டு கரைசலையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.  ஊறவைத்துள்ள மாவு கலவையை எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். முந்திரி, பாதாமை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். அதில் கிஸ்மிஸ் பழங்களை சேர்க்கவும்.

உருட்டிய உருண்டைகளை சிறிது தட்டையாக்கி அதில் நறுக்கி வைத்துள்ள பருப்பு வகைகளை சிறிது நடுவில் வைத்து அதை மூடி , மாவு கலவையை மறுபடியும் உருண்டைகளாக உருட்டி கட்டை விரலால் நடுவில் ஒரு அழுத்தம் கொடுத்து எடுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

பின்னர் கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் மாவு உருண்டைகளை போட்டு நன்றாக சிறுதீயிலே பொன்னிறமாக ஆகும் வரை வேகவிட்டு எடுக்கவும். பொன்னிறமாக வேக விட்டு எடுத்த பேடா உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து நன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதன்மேல் துருவிய பாதாம் முந்திரி தூவி பரிமாறவும்

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!