மிளகு சேர்த்த, பூண்டு குழம்பு ஒருமுறை இப்படி வைத்துப் பாருங்கள்!

பொதுவாகவே நம்முடைய உடலுக்கு மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம் போன்ற பொருட்களை சமையலில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் மிளகு சேர்த்த பூண்டு குழம்பை வித்தியாசமான முறையில் எப்படி செய்வது என்பதை பார்த்து விடலாமா? சரியான முறையில் இந்த குழம்பை வைத்தால், இரண்டு மூன்று நாட்கள் கூட கெட்டுப்போகாமல் இருக்கும். சூடாக வடித்த சாதத்தோடு, இந்த குழம்பை பிசைந்து சாப்பிடும் பட்சத்தில் மொத்த சாதமும் காலியாகிவிடும். அந்த அளவிற்கு காரசாரமான குழம்பு! செய்யும் போதே பசியை தூண்டும்.

மிளகு குழம்பிற்கு, அரவை அரைக்க தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், முழு தனியா – 1 ஸ்பூன், மிளகு – 2 டேபிள்ஸ்பூன், வரமிளகாய் – 3, கருவேப்பிலை – ஒரு கொத்து, சீரகம் ஒரு ஸ்பூன். –

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, இந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்க வேண்டும். கருவேப்பிலை சீரகத்தை மட்டும் இறக்குவதற்கு 30 வினாடிகளுக்கு முன்பு, போட்டு வறுத்து, உடனே கலவையை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் ஊற்றி வறுக்கக் கூடாது. ட்ரையாக வெறும் வாணலியில் தான் வறுக்க வேண்டும். இந்தப் பொருட்கள்யெல்லாம் வரும்போதே, உங்களுக்கு கமகமவென்று வாசனை வரும். வாசனை வரும் பக்குவத்திற்கு, பொன்னிறமாக வறுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொருட்கள் நன்றாக வறு படவில்லை என்றாலும் குழம்பு நன்றாக இருக்காது, தீய விட்டுவிட்டாலும் குழம்பு நன்றாக இருக்காது. இந்தப் பொருட்களையெல்லாம், நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 குழம்பு வைக்க தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், வெங்காய வடகம் – சிறிதளவு தாளிக்க, (வெங்காய வடகம் இல்லை என்றால் கடுகு – 1/2ஸ்பூன்), சின்ன வெங்காயம் தோலுரித்து – 15, சிறிய தக்காளி பழுத்தது – 1 பொடியாக வெட்டியது, பூண்டு – 10 பல் தோல் உரித்தது (பொடியாக நறுக்கியது), பெருங்காயம் – ஒரு சிட்டிகை, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன், தனியா தூள் 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, புளி கரைசல் – பெரிய நெல்லிக்காய் அளவு. அடுப்பில் கடாயை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சிறிதளவு வெங்காய வடகம் போட்டு தாளிக்க வேண்டும். வெங்காய வடகம் இல்லாதவர்கள், கடுகு தாளித்துக் கொள்ளலாம்.

கடுகு பொரிந்ததும், சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பின் பொடியாக வெட்டி வைத்திருக்கும் பூண்டு சேர்க்க வேண்டும். பூண்டு பாதியளவு வதங்கியதும், பின்பு தக்காளியை சேர்க்கவேண்டும். அதன்பின்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து, பெருங்காயம், மஞ்சள் தூள், வாசனைக்காக மிளகாய்த்தூள், தனியாத்தூள், சேர்க்கவேண்டும். அதன் பின்பு குழம்பிற்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து, எண்ணெயில் போட்டிருக்கும் பொருட்கள் எல்லாவற்றையும் வதக்கிய பின்பு, இறுதியாக நீங்கள் அரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்ற வேண்டும். கலவையோடு சேர்த்து புளிக் கரைசலையும் ஊற்றி விடுங்கள். தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். குழம்பு கிரேவி பதத்தில் தான் இருக்க வேண்டும்.

கிரேவி பதத்திற்கு, தண்ணீர் சேருங்கள். (மிக்ஸி ஜாரை கழுவி ஊற்றும் தண்ணீரும், புளிக்கரைசலில் இருக்கும் நீரும், தேவையான அளவு தண்ணீர் பதத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.) இப்போது மிதமான தீயில் குழம்பை கொதிக்க விட வேண்டும். கொதிக்கும்போது, எண்ணெய் தெறித்து வெளியே வராமல் இருக்க வேண்டும் என்பதால், ஒரு மூடியை போட்டு மூடிவிடுங்கள். மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை, மூடியைத் திறந்து கிளறி மறுபடியும் மூடி விடுங்கள். எல்லா பச்சை வாடையும் போகும் படி கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரிந்து மேலே மிதக்க வேண்டும். அவ்வளவுதான். இதற்கு மொத்தமாக 15 இலிருந்து 20 நிமிடங்கள் எடுக்கும். குழம்பு வைக்கும்போது எண்ணெயானது மிதக்கும் அளவிற்கு இருக்க வேண்டும். அப்போதுதான் இரண்டு நாட்கள் ஆனாலும் குழம்பு கெட்டுப் போகாது. எண்ணெய் குறைவாக ஊற்றினால், குழம்பு கெட்டுப் போவதற்கு வாய்ப்புள்ளது. உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் வீட்டிலும் ஒரு முறை இந்த ‘மிளகு பூண்டு’ குழம்பை முயற்சி செய்து பாருங்கள்!

Sharing is caring!