வெங்காய சப்ஜி செய்வது எப்படி ??

சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெங்காயம், தக்காளி, தேங்காயைத் தவிர வேறு எதுவும் இல்லையா? அப்படியானால் இந்த மூன்று பொருளைக் கொண்டு அட்டகாசமான ஒரு சைடு டிஷ் செய்யலாம். அது தான் வெங்காய சப்ஜி. இந்த வெங்காய சப்ஜி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் நன்றாக இருக்கும். மேலும் இது பேச்சுலர்களும் செய்வதற்கு ஏற்ற ஒரு எளிமையான சைடு டிஷ்.

இப்போது சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வெங்காய சப்ஜியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெங்காயம் – 3 (நீளமாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 4-5

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்

* தக்காளி – 2 (நறுக்கியது)

* மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தேங்காய் – அரை கப் (துருவியது)

* சோம்பு – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்ஸர் ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு விதைகளைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, சில நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.

* அடுத்து தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

* பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில் 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், வெங்காய சப்ஜி தயார்.

குறிப்பு:

* வீட்டில் தக்காளி இல்லாவிட்டால், இறுதியில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளுங்கள்.

* சப்ஜியின் சுவையை மேலும் கூட்ட வேண்டுமானால், பொட்டுக்கடலை அல்லது முந்திரியை தேங்காயை அரைக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சப்ஜி சற்று கெட்டியாக இருக்கும்.

* வெங்காய சப்ஜி சப்பாத்திக்கு மட்டுமின்றி ரொட்டி, புல்கா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்றதாக இருக்கும். வேண்டுமானால், அப்பம் அல்லது இடியாப்பம் போன்றவற்றுடனும் சாப்பிடலாம்.

Sharing is caring!