வெறும் அரைமணிநேரத்தில் இறாலை வைத்து அருமையான சிற்றுணவு..!!

இறால் தொக்கு, இறால்பொறியல்,இறால் கிரேவி கேள்விப்பட்டிருப்போம். அதேபோலத்தான் இறால் மோமோஸும்.. இது மேற்கத்திய உணவுதானே என இதை ஒதுக்கி விடாதீர்கள். விநாயகர் சதுர்த்தி வந்தால் அம்மா பிடிக்கும் கொழுக்கட்டையை தான் அவர்கள் மோமோஸ் என்ற பெயரில் வெஸ்டர்ன் ஃபுட் லிஸ்டில் வைத்து விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். நம்ம வித்தையை நமக்கே காட்டும் வேலைதான் சற்று வித்தியாசமாக! ஈரோட்டில் உள்ள ஒரு மேற்கத்திய உணவகத்தில் இது வெகு பிரபலம்.

சிற்றிடை உணவாக(ஸ்னேக்ஸ்) எடுத்துக்கொள்ள சிறந்த பதார்த்தம் என்பதால், மாலை நேரத்தில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் கூட்டம் இங்கு நிறைந்திருக்கும்..ஒரு சில உணவு வகைகள் சமைக்கும் போதே,பசியை தூண்டிவிடும்.அப்படித்தான் இந்த இறால் மோமோஸும்.. வைட்டமின் டி மற்றும் புரதம் நிறைந்த உணவு , குறிப்பாக இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இதனை டயட் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

இறால் மோமோஸ் செய்ய தேவையான பொருட்கள்:மைதா – முக்கால் கப்,இறால் கொத்தியது – 1 கப்.பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1 கப்,இஞ்சி- 1 டீஸ்பூன்,பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்- 2,எண்ணெய்-1 டீஸ்பூன்,உப்பு, தண்ணீர்-தேவைக்கேற்ப

செய்முறை:மோமோஸ் மேல்படர்வு செய்ய மைதாவுடன் எண்ணெய், உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர்விட்டு சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதனை 30 நிமிடத்திற்கு மூடி வைத்துவிடவும்.அடுத்ததாக உள்ளே நிரப்பும் பூரணம் செய்ய , இறாலுடன் வெங்காயம்,நறுக்கிய வெங்காயத்தாள், இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். மாவை சிறிய ஒரே மாதிரியான உருண்டைகளாக உருட்டி ஈரத்துணியில் மூடி வைத்து விடவும்.

ஓர் உருண்டையை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல சிறிய அளவில் தேய்த்துக்கொள்ளவும். இதன் நடுவில் செய்து வைத்த இறால் கலவையை வைத்து மடித்துக்கொள்ளவும்.ஆவியில் வேக வைக்க தாமதமானால், செய்துவைத்த மோமோஸ் மீது ஈரத்துணி போட்டு மூடிவைப்பது முக்கியமானது. பிறகு இட்லி குக்கரில் வைத்து 5 நிமிடங்கள் வேகவைத்தால் மோமோஸ் ரெடி.

ருசி எப்படி இருக்கும்?இறால் மோமோஸ், கண்டிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இருக்கும். குறிப்பாக வேக வைத்த பின்னர் இதன் தோற்றமே குழந்தைகளை உண்ண தூண்டும். உள்ளே வைத்த பூரணம் வெளியே தெரியும் படி ட்ரான்ஸ்பரன்டாக சிவப்பு நிறத்தில் உள்ள மோமோஸ்,இதனை சாஸ் அல்லது பூண்டு சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் சுவை அலாதியாக இருக்கும்.

Sharing is caring!