அருமையான சுவையில் செட்டிநாடு ஸ்டைலில் பனீர் குருமா செய்முறை

பால் பொருட்களுள் பனீர் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள். இதை கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அதிலும் செட்டிநாடு ரெசிபிக்களுள் பிரபலமான ஒன்றான பனீர் குருமாவும் ஒன்று. இந்த செட்டிநாடு பனீர் குருமா சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பனீர் – 250 கிராம்
சின்ன வெங்காயம் – 1/2 கப்
தக்காளி – 1 (நறுக்கியது)
கடுகு – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது

செட்டிநாடு விழுது தயாரிப்பதற்கு…

மல்லி விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு – 3
பட்டை – 1 இன்ச்
ஏலக்காய் – 1
மிளகு – 2 டீஸ்பூன்
கல்பாசி – 3
அன்னாசிப்பூ – 2
வரமிளகாய் – 6
கசகசா – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/2 கப்

செய்முறை: முதலில் ‘செட்டிநாடு விழுது’ செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அந்த பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு நீர் சேர்த்து மென்மையாக விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து, உப்பு தூவி பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

அடுத்து அதில் பனீர் துண்டுகளை சேர்த்து, அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, மூடி வைத்து 3-4 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்ததும் மூடியைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் பனீர் குருமா தயார்.

Sharing is caring!