சர்க்கரை நோய், மூட்டுவலியை போக்கும் தான்றிக்காய் துவையல்

மூட்டு வலியை போக்கும் தான்றிக்காய்… திரிபலாவில் சேர்க்கப்படும் முக்கியமான மூலிகை தான்றிக்காய். சர்க்கரையைக் கட்டுப்படுத்தும், மூட்டு வலியைப் போக்கும். பெண்களுக்கு ஏற்படும் எலும்பு நோய்களைத் தடுக்கும் ஆற்றல் தான்றிக்காய்க்கு உண்டு.

திரிபலாவில் தான்றியைச் சேர்த்துக்கொள்வது போல, தனியாகவும் சாப்பிடலாம். துவர்ப்பும், இனிப்புச் சுவையும் கொண்ட தான்றிக்காய் வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை: தான்றிக்காய் – 5, எலுமிச்சை, காய்ந்த மிளகாய் – தலா 3, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 5 பல், மல்லி – 1 டீஸ்பூன், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா – தலா அரை கைப்பிடி, கருஞ்சீரகம் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை: எலுமிச்சையைச் சாறு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தான்றிக்காயை விதை நீக்கி, ஒன்றிரண்டாக உடைத்து முதல் நாள் இரவே எலுமிச்சைச் சாற்றில் ஊறவைத்துவிட வேண்டும். மறு நாள், வாணலியில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகாய், மல்லி, பொடியாக அரிந்த கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா, மஞ்சள் தூள், கருஞ்சீரகம் ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

நன்கு வதங்கியதும் தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். தான்றிக்காயை விழுதாக அரைக்க வேண்டும். மறுபடியும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, ஏற்கெனவே வதக்கிவைத்துள்ள பொருட்களுடன், அரைத்துவைத்துள்ள தான்றிக்காய் விழுதைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து துவையலாக அரைக்க வேண்டும்.

பயன்: தான்றிக்காய் கபம், பித்தத்தைத் தணிக்கக் கூடியது. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். சளி இருமளைப் போக்கும். சுவாசப் பாதையில் உள்ள அதிகப்படியான சுரப்பு, அடைப்புகளைப் போக்கும். மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும்.

கை, கால், உடல், மூட்டு வலியைப் போக்கும். மூட்டுகளில் உண்டாகக்கூடிய வீக்கத்தைக் குறைக்கும். மூட்டுவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு சிறந்த மருந்து. ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த துவையலை தினசரி எடுத்துக்கொள்ளலாம்.

Sharing is caring!