ஸ்பெஷல் தவலை அடை செய்வது எப்படி ??

மாலை வேளையில் குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளோருக்கும் டீ, காபி கொடுக்கும் போது ஒரு அசத்தலான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அதுவும் சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டுமா? அப்படியானால் தஞ்சாவூர் ஸ்பெஷல் தவலை அடையை செய்து கொடுங்கள். இது தஞ்சாவூரில் உள்ள ஐயர் வீட்டில் செய்யக்கூடிய ஒரு பிரபலமான ஸ்நாக்ஸ் ஆகும். உங்களுக்கு தவலை அடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் ஸ்பெஷல் தவலை அடையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி – 1/2 கப்

* துவரம் பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – 3/4 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* மிளகு – 3/4 டீஸ்பூன்

* துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 3/4 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

* எண்ணெய் – 3-4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் அரிசி மற்றும் பருப்பை நீரில் 2 முறை கழுவி, நீரில் குறைந்தது 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் பருப்பு மற்றும் அரிசியில் உள்ள நீரை முற்றிலும் வற்றிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சீரகம், உப்பு மற்றும் மிளகு சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, துருவிய தேங்காயை போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பிறகு அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, நீர் முற்றிலும் வற்றும் வரை வேக வைத்து இறக்கி, 2-3 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.

* மாவானது வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது, தயாரித்து வைத்துள்ள மாவை சிறு எலுமிச்சை உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் எண்ணெய் தடவிய வாழை இலையில் ஒவ்வொரு உருண்டைகளையும் வைத்து, தட்டையாக தட்டிக் கொண்டு, நடுவே ஒரு ஓட்டையை போட வேண்டும்.

* பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் தட்டி வைத்துள்ளதைப் போட்டு, அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும், பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தட்டி தோசைக் கல்லில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான தஞ்சாவூர் தவலை அடை தயார்.

Sharing is caring!