புர்ஜி மசாலா செய்வது எப்படி ??

இன்று இரவு ஸ்பெஷலாக என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ஒரு சுவையான பன்னீர் புர்ஜி மசாலா செய்யலாம். இந்த மசாலா சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவில் ருசியாகவும் இருக்கும்.உங்களுக்கு பன்னீர் புர்ஜி மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் புர்ஜி மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 400 கிராம் (உதிர்த்துக் கொள்ளவும்)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 3 (அரைத்துக் கொள்ளவும்)

* இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* சாட் மசாலா – 3/4 டீஸ்பூன்

* உலர்ந்த வெந்தய கீரை – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பச்சை பட்டாணி – 1/4 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* வெண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருக்கவும்.

* வெண்ணெய் உருகியதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

* பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மசாலாவானது ஓரளவு கெட்டியானதும், அதில் பச்சை பட்டாணியை சேர்த்து கிளறி, ஒரு கப் நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அதில் உதிர்த்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து கிளறி, மேலே உலர்ந்த வெந்தய கீரை மற்றும் சாட் மசாலா, கரம் மசாலா சேர்த்து கிளறி, ஒருமுறை கொதிக்க வைத்து மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பன்னீர் புர்ஜி மசாலா தயார்.

Sharing is caring!