வரமிளகாய் சட்னி செய்வது எப்படி ??

இட்லி, தோசைக்கு பொருத்தமான சைடு டிஷ் என்றால் அது சட்னி தான். அதில் பலரும் விரும்புவது காரமான சட்னி. உங்களுக்கு காரம் அதிகம் இல்லாத, சுவையான ஒரு கார சட்னி செய்ய வேண்டுமானால், வரமிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு காஷ்மீரி மிளகாய் பயன்படுத்தினால், நல்ல சிவப்பு நிறத்துடன் கண்களைக் கவரும் வண்ணத்துடனும், மிதமான காரத்துடனும் இருக்கும்.

இப்போது வரமிளகாய் சட்னியின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு…

* சின்ன வெங்காயம் – 1/2 கப்

* தக்காளி – 1

* வரமிளகாய் – 2

* காஷ்மீரி மிளகாய் – 2

* புளி – 1 சிறு துண்டு

* கல் உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* பின் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய மிளகாய் விழுதை சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க வையுங்கள்.

* சட்னியில் இருந்து பச்சை வாசனை போனதும், மீண்டும் ஒரு 3-5 நிமிடம் எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் வரை வேக வைத்து இறக்கினால், வரமிளகாய் சட்னி தயார்.

குறிப்பு:

* நீங்கள் வேண்டுமானால், இந்த சட்னிக்கு சாதாரண வரமிளகாயைப் பயன்படுத்தலாம். ஆனால் காஷ்மீரி வரமிளகாயை பயன்படுத்தினால், நல்ல சிவப்பு நிறம் கிடைப்பதோடு, சட்னியின் காரமும் குறைவாக இருக்கும்.

* இந்த சட்னிக்கு நல்லெண்ணெயை தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது தான் இந்த சட்னியின் சுவைக்கு முக்கிய காரணம்.

Sharing is caring!