கார்ன் மெத்தி மலாய் கிரேவி செய்வது எப்படி ??

பொதுவாக கார்ன் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள். இந்த கார்னை வெந்தயக் கீரையுடன் சேர்த்து அருமையான சுவையில் ஒரு பஞ்சாபி கிரேவி செய்யலாம் என்பது தெரியுமா? இந்த கிரேவி சப்பாத்தி, பூரி, நாண், புல்கா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். அதுமட்டுமின்றி, இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திக்கும் போது செய்தால், அவர்களின் பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு கார்ன் மெத்தி மலாய் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார்ன் மெத்தி மலாய் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெந்தய கீரை – 2 கப்

* ஸ்வீட் கார்ன் – 1/2 கப்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* முந்திரி – 15

* பிரஷ் க்ரீம் – 1/2 கப்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மாங்காய் தூள் – 1/2 டீஸ்பூன்

* சர்க்கரை – 1/2 டீஸ்பூன்

* வெண்ணெய் – 2 டீஸ்பூன்

* ஏலக்காய் – 2

* சீரகம் – 1 டீஸ்பூன்

* பட்டை – 1/2 இன்ச்

* கிராம்பு – 2

* மிளகு – 3

செய்முறை:

* முதலில் வெந்தய கீரையை நீரில் நன்கு கழுவி பின் அதை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் முந்திரியை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கார்னை சேர்த்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து நீரை வடிகட்டி விட்டு கார்னை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின்பு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* அடுத்து, மிக்சர் ஜாரில் வதக்கி வைத்துள்ள வெங்காய தக்காளி கலவையைப் போட்டு, அத்துடன் ஊற வைத்துள்ள முந்திரியையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், ஏலக்காய், சீரகம் பட்டை, கிராம்பு மற்றும் மிளகு சேர்த்து தாளிக்கவும். மசாலாப் பொருட்களில் இருந்து நல்ல மணம் வரும் போது, அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மாங்காய் தூள் சேர்த்து சிறிது நீர் ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெந்தய கீரை மற்றும் வேக வைத்துள்ள கார்னை சேர்த்து குறைவான தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கிரேவியில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, அதில் சர்க்கரை மற்றும் க்ரீம் சேர்த்து கிளறி, குறைவான தீயில் 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கார்ன் மெத்தி மலாய் கிரேவி தயார்.

Sharing is caring!