சுவையான முட்டை ப்ரை செய்வது எப்படி ?

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தான் சிறந்த பலனைத் தரும். உங்கள் வீட்டில் உள்ளோர் வேக வைத்த முட்டையை சாப்பிட மறுக்கிறார்களா? அவர்களை வேக வைத்த முட்டையை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் முட்டை ப்ரை செய்து கொடுங்கள். இந்த முட்டை ப்ரை ரச சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். வேண்டுமானால், இந்த முட்டை ப்ரையை மாலை வேளையில் கூட குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.உங்களுக்கு சுவையான முட்டை ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை ப்ரையில் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டை – 3

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – 1/4 டீஸ்பூன்

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் முட்டையை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை குளிர வைத்து, ஓட்டை நீக்கிவிட்டு, முட்டை நீளவாக்கில் இரண்டாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு சிறிய பௌலில் மிளகாள் தூள், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு டீஸ்பூன் நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அதை முட்டையின் இருபுறங்களிலும் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு அகலமான பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, 3-4 முட்டை துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் இருபுறமும் வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து முட்டை துண்டுகளையும் வேக வைத்து எடுத்தால், சுவையான மற்றும் எளிமையான முட்டை ப்ரை ரெடி…

குறிப்பு:

* உங்களுக்கு கரம் மசாலா பவுடர் சேர்க்க வேண்டுமானால், அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* முட்டையை மிதமான தீயில் வேக வையுங்கள். இல்லாவிட்டால், எளிதில் கருகிவிடும்.

* மேலே குறிப்பிட்டுள்ள மிளகாய் தூளின் அளவு மிதமான காரத்தை அளிக்கும். உங்களுக்கு காரம் அதிகமாகவோ அல்லது இன்னும் குறைவாகவோ வேண்டுமானால் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

Sharing is caring!