ருசியான புளியோதரை செய்வது எப்படி?

புளியோதரை என்பது ஒரு பாரம்பரிய அரிசி உணவாகும். கோவில் திருவிழாக்களில் பிரதான உணவாக புளியோதரை மாறியுள்ளது.

மேலும் புளியோதரை எளிதில் கெட்டு போகாது. எனவே நெடுந்தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் கட்டு சோறாக புளியோதரையை பயன்படுத்துகின்றனர்.

புளியோதரையை எளிதாக எப்படி செய்யலாம் என இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 • சாதம் – 2 கப்
 • புளிக்காய்ச்சல்…
 • நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
 • தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
 • கடுகு – 1/2 டீஸ்பூன்
 • கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
 • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
 • வரமிளகாய் – 2
 • கறிவேப்பிலை – சிறிது
 • நாட்டுச்சர்க்கரை – 1 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
 • பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
 • புளி – 1 எலுமிச்சை அளவு
 • உப்பு – தேவையான அளவு

பொடி செய்வதற்கு…..

 • எண்ணெய் – 1 டீஸ்பூன்
 • கடலைப் பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
 • உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
 • மல்லி – 1/2 டேபிள் ஸ்பூன்
 • வரமிளகாய் – 2
 • வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
 • எள் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில்வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். புளியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து அதில் உப்பு சேர்த்த, பின் புளிச்சாற்றினை ஊற்றி, 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் போது இறக்கி, அதில் சாதத்தை போட்டு, தேவையான

அளவு உப்பு சேர்த்து கிளறி, பின் பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, 30 நிமிடம் கழித்து பரிமாறினால், ஐயங்கார் புளியோதரை ரெடி!!!

Sharing is caring!