முட்டை குழம்பு செய்வது எப்படி ??

கொரோனா ஊரடங்கால் சிக்கன், மட்டன் கிடைப்பது என்பது கடினம். ஆனால் உங்கள் விடுமுறை நாளன்று நல்ல சுவையான ஒரு அசைவ ரெசிபியை செய்து சுவைக்க நினைத்தால், செட்டிநாடு முட்டை குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டை குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு முட்டை குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு முட்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டை – 4-5

* எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

* தக்காளி – 2 (அரைத்துக் கொள்ளவும்)

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு…

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* துருவிய தேங்காய் – 1 கப்

* காஷ்மீரி வரமிளகாய் – 4-5

* மிளகு – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் முட்டையை வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த முட்டைகளை ஆங்காங்கு கத்தியால் கீறி விட வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள சீரகம், சோம்பு விதைகளைப் போட்டு தாளித்து, பின் துருவிய தேங்காய், வர மிளகாய் மற்றும் மிளகு சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்னர் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்துள்ள முட்டையைப் போட்டு லேசாக ஒரு நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பிறகு அரைத்து தக்காளியை ஊற்றி 2 நிமிடம் வேக வைத்து, பின் மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.

* மசாலாவில் உள்ள நீர் முற்றிலும் வற்றி அடிப்பிடிக்குமாறு வறண்டு இருந்தால், அதில் கால் கப் நீரை ஊற்றி கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மூடி வைத்து 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* மசாலா பச்சை வாசனை போய் நன்கு வெந்ததும், அதில் வேக வைத்துள்ள முட்டைகளைப் போட்டு, 3-4 வேக வையுங்கள். குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால் உங்களுக்கு வேண்டிய அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் 10-12 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே சிறிது எலுமிச்சை சாற்றினை பிழிந்துவிட்டால், சுவையான செட்டிநாடு முட்டை குழம்பு தயார்.

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

Sharing is caring!