வெந்தய கார குழம்பு செய்வது எப்படி ??

ஊரடங்கு காலம் என்பதால் நம்மால் அனைத்தையும் ஒரே வேளையில் ஞாபகம் வைத்து வாங்கி வைத்துக் கொள்ள முடியாது. சில சமயங்களில் சமையலுக்கு வேண்டிய காய்கறிகளைக் கூட வாங்க மறந்துவிடுவோம். அப்படி உங்கள் வீட்டில் சமைப்பதற்கு காய்கறிகள் இல்லாவிட்டால் கலவைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் வெந்தயம் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய கார குழம்பு செய்யலாம். இந்த வெந்தய கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு வெந்தய கார குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தய கார குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சின்ன வெங்காயம் – 8-10 (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* புளி பேஸ்ட்- 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – ஒரு டீஸ்பூன்

* எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

அரைப்பதற்கு…

* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* வெந்தயம் – 3/4 டீஸ்பூன்

* வரமிளகாய் – 2

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்து, பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து ஒருமுறை வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.

* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். அடிப்பிடிப்பது போல் இருந்தால், சிறிது நீரைத் தெளித்துக் கொள்ளுங்கள்.

* இப்போது அதில் புளி பேஸ்ட் மற்றும் ஒரு கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை குழம்பில் சேர்த்து, வேண்டுமானால் அரை கப் நீரை ஊற்றி, மீண்டும் 3-4 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வெந்தய கார குழம்பு தயார்.

Sharing is caring!