ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி?

ஆட்டுக் குடல் நம் வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்டுக் குடலை அடிக்கடி நாம் சமைத்து சாப்பிடும் போது உடல் சூட்டினால் உண்டாகும் பாதிப்புகள் குறையும், உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.

இதில் இருக்கும் ஜெலட்டின் மற்றும் புரோபயாடிக்குகள் செரிமான கோளாறுகளை சரி செய்யும். சுவையான ஆட்டுக் குடல் குழம்பு எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

ஆட்டு கறி குடல் – 500 கிராம்

வெங்காயம் – 4 ( பொடியாக நறுக்கியது )

தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)

தேங்காய் துருவல் – 1 கப்

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

பட்டை – 1 துண்டு

கிராம்பு – 2

சோம்பு – 1 ஸ்பூன்

கசகசா – 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

மல்லித்தூள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா – ½ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி ( பொடியாக நறுக்கியது )

செய்முறை

முதலில் ஆட்டு குடலை நன்கு சுத்தம் செய்து, சிறிதளவு மஞ்சள், உப்பு சேர்த்து நன்று அலசி எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய் துருவல், கசகசா, சோம்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

குக்கரில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்து, பொடிதாக நறுக்கி வைத்திருக்கம் வெங்காயத்தினையும் போட்டு நன்கு வதக்கவும்.

பின்பு தக்காளி சேர்த்து நன்கு குழைவாக வதக்கிய பின்பு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி, சுத்தம் செய்து வைத்திருக்கும் ஆட்டுக்குடலையும் சேர்த்து குடலில் நன்கு மசாலா சேரும் வரை வதக்கவும்.

இதனைத் தொடர்ந்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதையும், தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு இறக்கவும்.

விசில் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு கைப்படி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து பின்பு பரிமாறினால் சுவையான ஆட்டுக் குடல் குழம்பு தயார்.

Sharing is caring!