வெங்காய போண்டா செய்வது எப்படி ??

பலருக்கும் மொறு மொறுவென்று வெங்காய போண்டா உடன் டீ குடித்தால் பசி எல்லாம் பறந்து போகும். அந்த வெங்காய போண்டாவை பத்து நிமிடத்தில் வீட்டிலேயே நாம் எப்படி செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்…

தேவையான பொருட்கள்

  • பெரிய வெங்காயம் – 4
  • பச்சை மிளகாய் – 2
  • கறிவேப்பிலை – 1 கொத்து நறுக்கிய
  • மல்லித்தழை – 1 ஸ்பூன்
  • கடலை மாவு – 1/2 கப்
  • அரிசி மாவு – 1/4 கப்
  • மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
  • பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் பெரிய வெங்காயம் நான்கை எடுத்து தோலுரித்து நீள நீளமாக அரிந்து கொள்ள வேண்டும். நறுக்கிய வெங்காயத்துடன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர் பொடிப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். அவற்றுடன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளுங்கள்.

வெங்காயம் தண்ணீர் விடும் எனவே தண்ணீர் சேர்க்காமல் கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் மேற்கூறிய அளவின் படி கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

லேசாக தண்ணீர் தெளித்து எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒவ்வொன்றாக போட வேண்டும்.

அடுத்து, உருண்டைகளை உருட்டும் பொழுது லேசாக பந்து போல உருட்ட வேண்டும். நன்கு அழுத்தம் கொடுத்து உருட்டி விடக் கூடாது. அழுத்தம் கொடுத்து உருட்டினால் போண்டா இறுகிவிடும். சாப்பிடுவதற்கு நன்றாக இருக்காது எனவே லேசாக உள்ளங்கைகளால் பந்து போல தட்டி எண்ணெயில் போட வேண்டும்.

அதன் பின்னர் எல்லா பக்கமும் சிவக்க வறுபட வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல், அழுத்தம் கொடுக்காமல் உருண்டைகளை உருட்டி விடும் பொழுது எண்ணெய் அதிகம் குடிக்காது.

மொறுமொறுவென டீக்கடையில் கொடுக்கும் வெங்காய போண்டாவை போலவே சுட சுட சூப்பராக வெந்து வரும். இதனுடன் டீயுடன் சேர்த்து பரிமாறினால் அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.

Sharing is caring!