புகழ்மிக்க காஞ்சிபுரம் இட்லியை வீட்டிலேயே செய்யும் முறை

காஞ்சிபுரம் பட்டுக்கு அடுத்ததாக நமக்கு நினைவுக்கு வருவது, ‘காஞ்சிபுரம் இட்லி’. மிளகு, சீரகம், சுக்குனு சுவையான காஞ்சிபுரம் இட்லி செய்முறை உங்களுக்காக.

காஞ்சிபுரம் இட்லிக்கான செய்முறை:

தேவையான அளவு இட்லி அரிசியையும், உளுந்தையும் குறைந்தது நான்கு மணிநேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த அரிசியை இட்லி மாவு பதத்தில் மிருதுவாக அரைத்தப்பின் உப்பு சேர்க்கவும். பின், அரைத்த மாவை, இரவு முழுவதும் நன்றாக புளிக்க விடுங்கள்.

இரவு முழுவதும் மாவு நன்றாக புளித்திருக்கும். இப்போது, ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரி மற்றும் சுக்குப் பொடியை நன்றாக வறுக்கவும். முந்திரி பொன்நிறமாகும் வரை வறுத்தால், அதுதான் சரியான பதம். இவற்றை இட்லி மாவில் கொட்டிவிடவும்.

பின், பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் மிளகு ஆகியவற்றை முழுதாகவும், சம அளவில் இரண்டையும் பொடியாக்கி தாளித்து, பின் அதையும் மாவில் சேர்க்கவும். பின், அதே பாத்திரத்தில் பெருங்காயம் மற்றும் தேங்காய் சில்லுகளை வறுத்தும் சேர்க்கவும்.

இட்லி பானை அல்லது இட்லி குக்கரில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். பின், சம அளவிலான டம்ளர்களை எடுத்து, அதில் முக்கால் பாகத்துக்கு இட்லி மாவை ஊற்றி 15 முதல் 20 நிமிடங்களுக்கு நன்றாக வேக விடவும். அவ்வளவுதான் அருமையான ருசியில் காஞ்சிபுரம் இட்லி தயார்!

Sharing is caring!