கோழி உப்பு வறுவல் செய்வது எப்படி ??

செட்டிநாடு ரெசிபிக்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்குமா? உங்களுக்கு வீட்டிலேயே செட்டிநாடு ரெசிபிக்களை முயற்சிக்க வேண்டுமா? அதுவும் செட்டிநாடு சிக்கன் ரெசிபியை செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அதுவும் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்க வேண்டுமா? அப்படியானால் செட்டிநாடு கோழி உப்பு வறுவலை செய்யுங்கள். இது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது அனைவரும் சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுமாறு அற்புதமான சுவையில் இருக்கும்.உங்களுக்கு செட்டிநாடு கோழி உப்பு வறுவல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அதன் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோழி/சிக்கன் – 1/2 கிலோ

* சின்ன வெங்காயம் – 20 (நறுக்கியது)

* இஞ்சி – 1/2 இன்ச் (தட்டியது)

* பூண்டு – 20 பல் (தட்டியது)

* தக்காளி – 1

* வரமிளகாய் – 10

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சோம்பு – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்பு கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வரமிளகாயைப் போட்டு லேசாக வதக்கி, நறுக்கிய சின்ன வெங்காயம், தட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.

* வேண்டுமானால் சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரை கப் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து, 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* சிக்கன் நன்கு வெந்ததும் மூடியைத் திறந்து, தீயை அதிகரித்து நீர் முற்றிலும் வற்றும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு கோழி உப்பு வறுவல் தயார்.

Sharing is caring!