மருத்துவக்குணங்கள் நிறைந்த கவுனி அரிசி பேரீட்சை கீர் செய்முறை

கவுனி அரிசியை, பர்ப்பிள் ரைஸ் (Purple Rice) ஸ்டிக்கி ரைஸ் (Sticky Rice) எனவும் கூறுவர். மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த அரிசியை பண்டைய சீனாவில் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள்.

இந்த அரிசியுடன் பேரீச்சை சேர்த்து கீர் செய்து சாப்பிட்டு பாருங்கள். அருமையான ருசியாக இருக்கும்.

செய்முறை: நான்கு டேபிள்ஸ்பூன் கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். 20 பேரீச்சம்பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஊறவைத்த கவுனி அரிசியின் தண்ணீரை வடித்துவிட்டு உலர வைக்கவும்.

பிறகு, லேசான ஈரப்பதத்தோடு இருக்கும் அரிசியை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்துக்கு உடைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து ஒரு லிட்டர் பாலை ஊற்றி, ஒரு கொதிவந்ததும், உடைத்த அரிசியைச் சேர்த்து மூடிபோட்டு நான்கு விசில் வரும் வரை வேகவிடவும். வெந்தவுடன் அதனுடன் அரைத்த பேரீச்சம்பழ விழுது, நான்கு டேபிள்ஸ்பூன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கலக்கி கொதிக்கவிடவும்.

கலவை எல்லாம் நன்கு சேர்ந்து வந்ததும், துருவிய பாதாம் பத்து, ரோஸ்வாட்டர் நான்கு சொட்டுகள் சேர்த்துக் கலக்கி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.

சிறப்பு: இந்த அரிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது. நீரிழிவு, புற்றுநோய், இதய நோய் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நம்மைக் காப்பாற்றுகிறது. கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது.

மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.

Sharing is caring!