மாலை நேரத்தில் புத்துணர்ச்சி பெற உதவும் த்ரீ கிரெய்ன்ஸ் சுண்டல்

சத்தான ஸ்நாக்ஸைச் சாப்பிட்டால் புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியத்தையும் ஒருசேரப் பெறலாம். அதற்கு இந்த த்ரீ கிரெய்ன்ஸ் சுண்டல் உதவும். இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை: தலா ஒரு கப் ஓட்ஸ், ரவை, ராகி மாவு மூன்றையும் வெறும் வாணலியில் நன்கு வறுத்து எடுத்து ஆறியதும், தேவையான அளவு உப்பு, தயிர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி இட்லித் தட்டில் வைத்து வேகவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இரண்டு காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டுச் சிவந்ததும் அரை டீஸ்பூன் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து, வேகவைத்த உருண்டைகளைச் சேர்த்துப் புரட்டவும்.

பின்னர் இரண்டு டீஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையும் சத்தும் மிகுந்த சுண்டல் ரெடி.

பயன்கள்: சத்துகள் நிறைந்த இந்தச் சுண்டல் அனைவருக்கும் ஏற்றது. பருமனைக் கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Sharing is caring!