அசத்தல் சுவையில் வெண்டைக்காய் முந்திரி பொரியல் செய்து பாருங்கள்

வெண்டைக்காயை கொண்டு சாம்பார், புளிக்குழம்பு, பொரியல் என்று பல வகை சாப்பிட்டு இருப்பீர்கள். வெண்டைக்காய் மற்றும் முந்திரி கொண்டு பொரியல் செய்தால், இன்னும் அட்டகாசமாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – 1/2 கிலோ
பூண்டு – 4
முந்திரி – 8
துருவிய தேங்காய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, துணியால் துடைத்துவிட்டு, பின் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் முந்திரியைப் போட்டு, பொன்னிறமாக மாறும் வரை வதக்கியதும், வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெண்டைக்காய் நன்கு சுருங்கி வேகும் வரை வதக்கவும்.

வெண்டைக்காய் நன்கு வெந்ததும், இறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் முந்திரி பொரியல் தயார்.

Sharing is caring!