இலவசமாக கல்வி, குடிநீர், மருத்துவம் வழங்குவோம்; நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதி

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் கல்வியில் முதல் மாநிலமாக தமிழகம் மாறும், இலவச குடிநீர், இலவச கல்வி, தடையற்ற மின்சாரம், இலவச மருத்துவம் ஆகியவை வழங்கப்படும் என்று சீமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார்.

மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி சீமான், “சாதி, மத உணர்ச்சி என்பது கையை வெட்டி பிளக்கும் கத்தி, மொழி, இனம் எனும் உணர்ச்சி அதை தைத்து இணைக்கும் ஊசியும் நூலும் போன்றது. நான் ஆட்சிக்கு வந்தால் சுங்கச்சாவடிகளே இருக்காது.

விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசம். இலவசங்களை தவிர்த்துவிட்டு மக்களின் வாங்கும் திறனையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவோம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வாசிங் மெஷின், கிரைண்டர், மிக்சி போன்ற இலவசங்கள் கிடைக்காது. இலவசம் கேட்டு மக்கள் கையேந்தும் நிலை மாறும். சீமான் கையேந்தினால் பிச்சை. மக்கள் அனைவரும் கையேந்தினால் அதற்கு இலவசம் என பெயர்.

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் கல்வியில் முதல் மாநிலமாக தமிழகம் மாறும், இலவச குடிநீர், இலவச கல்வி, தடையற்ற மின்சாரம், இலவச மருத்துவம் ஆகியவை வழங்கப்படும். அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பார்கள். ஆனால் தலைவர்கள் அடுத்த தலைமுறையினரை பற்றி சிந்திப்பார்கள். மற்ற அரசியல் கட்சியினர் நம்மை ஆள வேண்டுமென நினைப்பார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சியினரோ மக்களை வாழ வைக்க நினைக்கின்றோம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது ஆனால் மாறுதல் வரவில்லை. 50 ஆண்டுகளாக இலவசங்களைக் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. லஞ்சம், ஊழல் மூலம் பல கோடிகளைச் சேர்த்துக்கொண்டு அதில் நூறு ரூபாயை மட்டும் இலவசமாகக் கொடுக்கின்றனர்.

என்னை சாதி தலைவர் அடையாளத்துக்குள் புகுத்த நினைத்தார்கள். ஆனால் நான் சுதாரித்துக்கொண்டேன். இந்தியாவில் மதம் அரசாள்கிறது மனிதம் ஆளவில்லை.” என சாடினார்.

Sharing is caring!